

இன்று நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நினைவுநாள் (21.7.19)
- கவிஞர் மு.ஞா.செ.இன்பா
’அய்யன் சிவாஜி’ என நடிகர் திலகத்தின் ரசிகப் பிள்ளைகள் தற்போது சிவாஜி கணேசன் அவர்களை அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
அறிவில் சிறந்தோரை ’அய்யன்’ என்றழைப்பது தமிழரின் மரபு. கலை அறிவில் சிறந்த சிவாஜியை அய்யன் என்று அழைப்பது பொருத்தமான செயலாகவே உணர்ந்துதான் இப்படி இவர்கள் அவரை அழைக்கிறார்கள்.
‘நடிப்பு’ என்ற சொல்லுக்கு சிவாஜிதான் முகவரி எனப் பலரும் பட்டியலிட்டுவிட்டார்கள். கடந்த காலங்களின் ரம்யமான நாட்களைத் தேடி, அதனை மயில் இறகு கொண்டு வருடி, மனசுக்குள் மகிழ்வைப் பிறப்பிப்பது தனிக் கதை.
தமிழ்த் திரையுலகின் பொற்கால ஆண்டுகளில் 1964-ம் ஆண்டுக்குத் தனி இடம் உண்டு. சென்னையில் இயங்கிக் கொண்டிருந்த திரையரங்குகள் வசூல் மழையில் குளிர்ந்து கொண்டிருந்தன.
சாந்தி திரையரங்கில் ’சங்கம்’, பிளாசாவில் ’தெய்வத்தாய்’, மிட்லண்டில் ’கை கொடுத்த தெய்வம்’, வெலிங்டனில் ’அருணகிரி நாதர்’, கெயிட்டியில் ’பொம்மை’, காசினோவில் ’காதலிக்க நேரமில்லை’, சித்ராவில் ’பூம்புகார்’, ஸ்டாரில் ’தோஸ்த்’, பாரகனில் ’புதிய பறவை’ எனத் திரைப்படங்கள் தயாரிப்பாளர்களை குபேரனாக்கி மறுபிறப்பு அடையச் செய்தன.
சென்னை - அண்ணா சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட சபையர் திரையரங்கு, கிளியோபட்ராவின் கவர்ச்சிக் கண் சிமிட்டலில் ஒவ்வொருவரையும் அழைத்து, தன் இருப்பை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தது.
இலங்கை வானொலியில் எங்கே நிம்மதி, சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, உன்னை ஒன்று கேட்பேன் போன்ற பாடல்களின் இசைத்தட்டுகள் தினமும் பலமுறை ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சுழல விடப்பட்டு, மக்களின் மனங்களில் ஒய்யாரமாய் இருக்கைப் போட்டது.
ஆங்கிலப் படத்தில் தவறு செய்த கதாநாயகியை துப்பறியும் கதாநாயகன் என்ற கோணத்தில் பயணப்பட்ட கதையைக் கொஞ்சம் மாற்றி, தவறு செய்யும் கதாநாயகனைத் துப்பறியும் கதாநாயகியாக உருவாக்கி உருவான கதையில் வங்காள மொழிப் படத்தின் திரைக்கதையைக் கலந்து ’புதிய பறவை’ உருவாகியிருந்தது.
உத்தம் குமார், சர்மிளா தாகூர், சபிதா சௌத்ரி நடித்த வங்காள மொழிப் படம் அது. இந்தப் படம் ஆங்கிலப் படத்தின் தழுவல். ராஜ்குமார் மித்ரா வங்காளப் படத்துக்காக எழுதிய திரைக்கதையை வாங்கி, சிவாஜிகணேசன் தனது சொந்தப் பட நிறுவனத்தின் சார்பில் ’புதிய பறவை’ படத்தை உருவாக்கினார். ஜெமினி கலைக்கூடத்தில் உருவான 2-வது வண்ணத் தமிழ்படம் இது.
இந்தப் படத்தின் பாடல்களை கவியரசு கண்ணதாசன் எழுதினார். ஆரூர் தாஸ் உரையாடல் எழுதும் படங்களில் கவிஞர் பாடல் எழுதினால், அருகில் இருந்து அதனை ரசித்து மெய் மறப்பது வசனகர்த்தா ஆரூர் தாஸின் வாடிக்கை.
’ சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...’ என்ற பாடலைக் கவியரசர் எழுதிக்கொண்டிருந்தார் அப்போது. அருகில் ஆரூர் தாஸ்.
’ஒரு பொழுதில் மலராகக் கொடியில் இருந்தேனா...
ஒரு தடவை தேன் குடித்து மடியில் விழுந்தேனா...’ - என்று கவியரசரின் விரல்கள் எழுதியதை... பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் ஆரூர்தாஸ் ரசிக்கவில்லை என்பதை அவரின் முகம் கவியரசருக்கு காட்டிக்கொடுத்துவிட்டது.
உடனே ஆரூர் தாஸிடம் கவியரசர்... ‘’ என்ன தாஸ்.. இந்த வரிகள் உனக்குப் பிடிக்கவில்லையா?’’ எனக் கேட்டுள்ளார்.
’’ஒரு தடவை தேன் குடித்து மடியில் வீழ்ந்தேனா... என்ற வரி இந்தப் பாடலுக்குப் பொருந்தவில்லை கவிஞரே. பெண் என்பவளுக்கு எப்போதும் கொடுத்துத்தானே பழக்கம்...’’ என்று சொல்லியிருக்கிறார் ஆரூர் தாஸ்.
கவியரசர் சற்றும் தயங்காமல் ‘ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் வீழ்ந்தேனா...’ என மாற்றி எழுதிக் கொடுத்தார் என்பது சினிமா வரலாறு.
அப்படி அனைத்து மேதைகளும் பணிபுரிந்த அய்யன் சிவாஜியின் ‘ புதிய பறவை’ படத்தில் அவரது நடிப்பு உச்சம் தொட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிவாஜிக்கு அடுத்தபடியாக நடிப்பில் கொடி நாட்டிய சௌகார் ஜானகியே வியப்புச் செய்தியானார்.
‘சௌகாரு’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான சௌகார் ஜானகிக்கு பெயர் சொல்லும்படியான படங்கள் அதுவரை அமையவில்லை. கதாநாயகனின் இணையராக நடித்தாலும், இரண்டாவது கதாநாயகி போன்ற வேடங்கள்தான் சௌகாருக்குக் கிடைத்தன.
பத்மினி, சாவித்திரி, தேவிகா, சரோஜா தேவி, ஜமுனா, ராஜ சுலோசனா, இ.வி.சரோஜா, எம்.என்.ராஜம், விஜயகுமாரி போன்றவர்களுக்குக் கிடைத்த அங்கீகாரத்தில் கால்பகுதி கூட சௌகாருக்கு அப்போது கிடைக்கவில்லை.
திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் கழித்து ’புதிய பறவை’ படத்தில் நடித்து நிலையான இடத்தைப் பெற்றார் சௌகார் ஜானகி,
படத்தில் கிளப் பாடகியாக வரும் கதாபாத்திரத்துக்கு பிரபலமான சில நடிகைகளின் பெயர்கள் ஆய்வு செய்யப்பட்டன. சிவாஜி மனதில், சௌகார் நடித்தால் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. தன் கருத்தை படக்குழுவினரிடம் தெரிவித்தார். சிவாஜியின் திட்டத்தை ஏற்க மனமின்றித் தவித்தனர் படக்குழுவினர்.
நவநாகரீக மங்கை வேடம் அது. குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்கும் சௌகாருக்கு எள்ளளவும் பொருந்தாது என இப்படத்தின் இயக்கநர் தாதா மிராசி மறுத்துப் பார்த்தார். சிவாஜி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.
உற்ற கலைஞர்களின் திறமையைக் கணிப்பதில் சிவாஜிக்கு நிகராக யாரையும் சொல்ல முடியாது. நாகேஷின் நடிப்புத் திறனை ’திருவிளையாடல்’ படத்தில் தட்டிக் கொடுத்து தருமியாக மிளிரச் செய்தவர் அவர். ’எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில் ஜெயலலிதாவின் நடிப்பை மிளிரச் செய்து சிறந்த நடிகை என்று திரையுலகத்துக்கு அடையாளம் காட்டினார். ’நீலவானம்’ படத்தில் தேவிகாவின் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார். ’உயர்ந்த மனிதன்’ படத்தில் அசோகனின் நடிப்பை மெய்சிலிர்க்கும்படி மாற்றி அமைத்தார். சௌகாரால் ’புதிய பறவை’ படத்தில் மிளிர முடியும் என சிவாஜி நம்பியது, தன்னால் அக்கலைஞரை மெருகேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.
சிவாஜியின் கணிப்பு பொய்த்துப் போகவில்லை. அதுவரை 99 படங்களில் நடித்திருந்தும் சாதிக்காத சாதனையை, 100-வது படமான ’புதிய பறவை’ படத்தில் சாதித்தார் சௌகார் ஜானகி.
தன்னைப் போல பிறரையும் கருதும் எண்ணம் இருந்தால், அடுத்தவர் திறமையும் அகமகிழ்வே என்ற தத்துவம் சிவாஜிக்குள் உயிராக இருந்ததால், சிவாஜியோடு நடித்த கலைஞர்கள் எல்லாம் மிளிர்ந்தார்கள். ‘புதிய பறவை’ சௌகார் ஜானகியே அதற்குச் சான்று. ஜெமினி அரங்கின் வலது பக்கம் ’புதிய பறவை’ படத்தின் பெரிய விளம்பரத் தட்டி வைத்திருந்தார்கள்.
எங்கே நிம்மதி... என்ற பாடலில் சிவாஜி கை விரித்து நடிப்பது போன்ற படம் அதில் இடம் பிடித்தது. சௌகார் ஜானகியின் படமும் பெரிய அளவில் சிவாஜிக்கு அருகில் இடம் பிடித்திருந்தது.
மாபெரும் வெற்றி பெற்ற ’புதிய பறவை’ படத்தை மீண்டும் உருவாக்கத் திட்டமிடுவதாகவும், சிவாஜி வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என ஆலோசித்து, அதற்கு விடை கிடைக்காத காரணத்தால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும் செய்திகள் உண்டு.
’புதிய பறவை’ படத்தில் கொலை செய்த குற்றத்தை வாக்கு மூலமாகச் சொல்லிவிட்டு, அழுகையோடு சிவாஜி மூக்கைச் சீந்தும் காட்சி இன்றும் கை தட்டல் பெறும் காட்சி.
கலைத் தாயின் முந்தானையில் தூளி கட்டி, தாலாட்டுப் பாட்டு கேட்கும் நடிகர்கள் மத்தியில் கலைத் தாயாக பிறப்பெடுத்த சிவாஜி, வியப்பின் ஆச்சரியக்குறி. அவரின் நாடி நரம்புகள் நடிப்பைப் பயிற்றுவித்தன என்றால், அவர் காட்டிய நாட்டுப் பற்று, இறைப் பற்று, மொழிப் பற்று இன்றும் தமிழனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கின்றன.
இன்று அவரின் நினைவு நாள். நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்கான பதிவு அல்ல இது. அந்தக் கலைப் பறவையின் நினைவுச் சிறகு எம்மீது பட்ட தென்றல் என்றும் நமக்கு உயிர்க் காற்றைத் தரும் என்பதால் அதற்கான நன்றிக் கடன் இது.
அய்யன் சிவாஜி அகிலமே வியந்த ஒரு ஆச்சரியம்!