சிம்புவின் ‘மாநாடு’ ட்ராப்? - படக்குழு விளக்கம்

மாநாடு
மாநாடு
Updated on
1 min read

சிம்புவின் ‘மாநாடு’ ட்ராப் ஆனதாக வெளியாகியுள்ள செய்திக்கு, படக்குழு விளக்கம் அளித்துள்ளது.

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘மாநாடு’. சிம்பு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் கே எல் எடிட்டராகப் பணியாற்றவுள்ளார்.
வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். கடந்த வருடம் ஜூன் 28-ம் தேதி இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. ஆனால், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
‘மாநாடு’ படத்துக்காக இரண்டு மாதங்கள் வெளிநாட்டில் தங்கியிருந்து உடல் எடையைக் குறைத்த சிம்பு, தற்காப்புக் கலைகளையும் பயின்றார். இந்த வருடம் பிப்ரவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி தொடங்கவில்லை.
எனவே, படம் ட்ராப் என செய்திகள் வெளியாகின. ஆனால், அதை படக்குழு மறுத்தது. பின்னர், வேறொரு தேதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தொடங்கப்படவில்லை. இப்படி தேதி அறிவிப்பதும், பின்னர் தள்ளிப்போவதுமாகவே இதுவரை நடந்து கொண்டிருக்கிறது.
கடைசியாக, ஜூன் 25-ம் தேதி மலேசியாவில் படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை படப்பிடிப்பு தொடங்காததால், வழக்கம்போல் ‘படம் ட்ராப்’ என செய்தி வெளியானது.
இதுகுறித்து படக்குழுவிடம் கேட்டபோது, “படம் ட்ராப் ஆகவில்லை. ஆடி மாதம் என்பதால், இந்த மாதம் முடிந்தபிறகு படப்பிடிப்பு தொடங்கும்” என விளக்கம் அளித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in