

திடீரென்று விளம்பரப்படுத்தப்படும் டப்பிங் படம் தொடர்பாக பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் பார்த்திபன். தற்போது தமிழில் அவரே இயக்கி, நடித்துள்ள 'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே ஜூலை 19-ம் தேதி முதல் பார்த்திபன் நடிக்கும் 'KR மார்க்கெட் c/o தீனா' என்ற படம் விளம்பரப்படுத்தப்பட்டது. இதனால் பலரும் இது எப்போது நடித்த படம் என்று பார்த்திபனைக் கேள்வி எழுப்பி வந்ததாகத் தெரிகிறது.
இந்தப் படம் தொடர்பாக பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “இது கிமு-வில் கன்னட மொழியில் (வெறும் 7 நாட்கள் மட்டுமே கவுரவ வேடத்தில்) முழுக்க முழுக்க கன்னட நண்பர்களுடன் (நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள்) நடித்தது! அதை மொழி மாற்றம் (என் குரலில் அல்ல) செய்து தமிழ்ப் படம் போல் வெளியிடுகிறார்கள்.
நேற்று இயக்குநர் அமீர் "தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறையீடு செய்ய வில்லையா?" எனக் கேட்டார். செய்தேன். "இது ஒரு மொழி மாற்றுப் படம்" என்றாவது விளம்பரப்படுத்த வேண்டுமென நிர்பந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்றி. டப்பிங் படம் பார்க்க விரும்புபவர்கள் பார்க்கட்டுமே.
என் புகைப்படத்தையும் பெயரையும் பயன்படுத்தி அசல் தரத்தில் எடுக்கப்பட்ட படமென ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதே என் நோக்கம்” என்று தெரிவித்துள்ளார் பார்த்திபன்