

'மெட்ரோ' இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளார்.
'ஆள்', 'மெட்ரோ' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ஆனந்த் கிருஷ்ணன். இதனைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடிக்கும் 'ஆக்ஸிஜன்' படத்தை இயக்கி வந்தார். அந்தப் படத்தைத் தயாரித்து வந்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியதால், படப்பிடிப்பு தடைப்பட்டது.
இந்நிலையில் தற்போது தனது புதிய படத்தைத் தொடங்கியுள்ளார் ஆனந்த் கிருஷ்ணன். இதில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படப்பூஜையுடன் கூடிய பணிகள் தொடங்கிய நிலையில், இந்தப் புதிய படம் குறித்து ஆனந்த் கிருஷ்ணனிடம் கேட்ட போது, “'மெட்ரோ' முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் இருக்கும்.
ஆனால், விஜய் ஆண்டனி சார் படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர். அவருக்கு இந்தக் கதைப் பொருத்தமாக இருக்கும் என்பதால் கூறினேன். அவரும் உடனே ஒப்புக் கொண்டார். இப்போது தான் படத்தின் முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளோம்.
தற்போது விஜய் ஆண்டனி சாருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. அப்பணிகள் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.