உண்மையான காதல் என்னைக் குணமாக்கியது: புதிய காதலர் குறித்து அமலாபால் விளக்கம்

அமலாபால் | படம்: அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து...
அமலாபால் | படம்: அவரது ட்விட்டர் பக்கத்திலிருந்து...
Updated on
1 min read

உண்மையான காதல் என்னைக் குணமாக்கியது என்று தன் புதிய காதலர் குறித்து அமலா பால் தெரிவித்துள்ளார். 

ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், வி.ஜே ரம்யா, ஸ்ரீரஞ்சனி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆடை'. இதன் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து படம் ஜுலை 19-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பேட்டிகளில், தான் இப்போது பாண்டிச்சேரியில் காதலருடன் செட்டிலாகிவிட்டதாகக் குறிப்பிட்டார் அமலாபால். பாண்டிச்சேரியிலிருந்து தான் சென்னை படப்பிடிப்புக்கு வந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

'ஆடை' படத்தில் சில காட்சிகளில் ஆடையின்றி நடித்துள்ளார் அமலாபால். இது தொடர்பாக 'உங்கள் நடிப்பு பற்றிய அனைத்து முடிவுகளையும் உங்கள் காதலருடன் பகிர்ந்து கொள்வீர்களா' என்ற கேள்விக்கு அமலாபால், “கண்டிப்பாக. நான் இன்று இப்படி மாறியதற்கு, என் வேலையை நான் பார்க்கும் விதத்துக்கு எல்லாம் அவர் தான் காரணம். 

நான் நோக்கமே இல்லாத ஒரு போராட்டத்தில் இருந்தேன். அவரது காதல் தான் என்னைக் குணமாக்கியது. உண்மையான காதல் என்னைக் குணமாக்கியது. ஒரு தாயால் தான் நிபந்தனையில்லாத அன்பு தர முடியும், தியாகம் செய்ய முடியும் என்று நினைத்தேன். ஆனால் என்னாலும் அது முடியும் என்று என் காதலர் நிரூபித்துவிட்டார். 

என்னுடன் இருக்க, என்னை ஆதரிக்க அவர் அவரது வேலையை விட வேண்டியிருந்தது. எனது கனவு என்னவென்று அவருக்குத் தெரியும். அதை அவர் மதிக்கிறார். என்னுடன் நிற்கிறார். எனது குறைகளைச் சொல்வார். நடிகர்களாகிய எங்களுக்குப் பெரிய பிரச்சினை உள்ளது. நாங்கள் எப்போதுமே ஒரு சந்தேகத்தில் இருப்போம். மென்மையாக இருப்போம். எங்களைப் புகழும் ஆட்களையே சுற்றி வைத்திருப்போம், அப்படிப்பட்டவர்களால் நாம் முன்னேற முடியாது என்று உணரும் வரை. ஆனால் என் காதலர் என் ஈகோவை விரட்டினார். 

எனது முந்தைய படங்களைப் பார்த்து நான் ஒரு கேவலமான நடிகை என்று சொல்லியிருக்கிறார். நான் நடிப்பில் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும் என்றார். பயிற்சி இல்லாத போது, என்னைச் சரியாகப் பராமரித்துக்கொள்ளாத போதும் இன்னும் துறையில் இருப்பது ஆச்சரியம் என்றார். ஆனால், இப்படி இருந்தால் தொடர்ந்து இயங்க முடியாது என்றும் சொன்னார். எனது மூன்றாவது கண்ணைத் திறந்தார் என்றும் சொல்லலாம். அவர் என் வாழ்க்கையில் நான் கண்ட உண்மை" என்று தெரிவித்துள்ளார் அமலா பால்.

ஆனால், தன் புதிய காதலரின் பெயர் என்ன, அவரது புகைப்படம் உள்ளிட்ட எதையுமே அமலா பால் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in