'சைக்கோ' அப்டேட்: இளையராஜா இசையில் பாடிய சித் ஸ்ரீராம்
மிஷ்கின் இயக்கி வரும் 'சைக்கோ' திரைப்படத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் இளையராஜா இசையில் பாடியுள்ளார்.
சித் ஸ்ரீராம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'கடல்' படத்தில், 'அடியே' என்ற பாடல் மூலம் அறிமுகமானவர். குறைந்த காலகட்டத்திலேயே இளைஞர்களுக்குப் பிடித்த பாடகராக மாறிவிட்டார். முக்கியமாக, 'கீத கோவிந்தம்' படத்தில் இவர் பாடிய 'இன்கேம் இன்கேம்.....' பாடல், மொழிகள் கடந்து மிகப்பெரிய ஹிட்டானது.
தற்போது தமிழில் வெளியாகும் ஒவ்வொரு படத்திலும் குறைந்தது ஒரு மெலடிப் பாடலையாவது சித் ஸ்ரீராமை பாட வைப்பது என சென்டிமெட்டாகி, அவரைப் பயன்படுத்தி வருகின்றனர் இசையமைப்பாளர்கள்.
உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டவர்கள் நடிக்க, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் 'சைக்கோ' படத்துக்கு இசை இளையராஜா. இதன் ஒளிப்பதிவை பி.சி.ஸ்ரீராம் கவனிக்கிறார்.
"மேஸ்ட்ரோ இளையராஜா 'சைக்கோ' படத்துக்கான கடைசிப் பாடல் பதிவை முடித்துவிட்டார். இந்தப் பாடலைப் பாடியிருப்பவர், பாடும் விதத்தால் சமீபத்தில் நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ள சித் ஸ்ரீராம். இயக்குநர் மிஷ்கினும், இளையராஜாவும் 'சைக்கோ'வை இன்னொரு புதிய தளத்துக்குக் கொண்டு செல்லத் தயாராக இருக்கிறார்கள்" என்று பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
