

தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜெர்ஸி' தமிழில் ரீமேக் ஆகிறது. நானி நடித்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார்.
ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற தெலுங்குப் படம் 'ஜெர்ஸி'. கெளதம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார்.
பெரும் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, அதன் ரீமேக் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இந்தி ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர் கைப்பற்றியுள்ளார். இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழில் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை 'மான்ஸ்டர்' இயக்குநர் நெல்சனிடம் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கிரிக்கெட்டில் முன்னணி வீரராக இருக்கும் போது அதிலிருந்து விலகி, பின்பு தன் மகனுக்காக பழைய நிலைக்கு வருவதே 'ஜெர்ஸி' படத்தின் கதையாகும். விஷ்ணு விஷால் பிரமாதமாக கிரிக்கெட் விளையாடக் கூடியவர் என்பதால், இதன் ரீமேக் தனக்குப் பொருத்தமாக இருக்கும் என தமிழ் ரீமேக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.