இப்ராகிம் ராவுத்தருக்கு விஜயகாந்த் உருக்கமான கடிதம்

இப்ராகிம் ராவுத்தருக்கு விஜயகாந்த் உருக்கமான கடிதம்
Updated on
1 min read

உடல்நிலை சரியில்லாத தனது நண்பர் இப்ராகிம் ராவுத்தருக்கு, விஜயகாந்த் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

விஜயகாந்த்திற்கு மிகவும் நெருக்கமான நண்பராக இருந்து வந்தவர் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர். விஜயகாந்த் நடிப்பில் 'கேப்டம் பிரபாகரன்', 'புலன் விசாரணை' உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்தார். விஜயகாந்த் நாயகனாக உருவான பின்பு அவரது நிழலாக பல ஆண்டுகள் இருந்து வந்தவர் ராவுத்தர். இவரது நட்பில் சில காலத்திற்கு முன்பு விரிசில் ஏற்பட்டது.

தற்போது சில நாட்களாக தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை கேள்விப்பட்டு விஜயகாந்த், மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.

அதனைத் தொடர்ந்து விஜயகாந்த் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடித்ததில் "நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன்.

உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முனே வந்து சென்றன.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா” என்று தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in