

வெறுமனே அரட்டைகள் அடிக்கிற பல படங்களுக்கு மத்தியில் 'தோழர் வெங்கடேசன்' எளிமையான மனிதர்களைப் பற்றிய மிக எளிமையான படம் என்று இயக்குநர் மீரா கதிரவன் பாராட்டியுள்ளார்.
மகாசிவன் இயக்கத்தில் அரிசங்கர், மோனிகா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான திரைப்படம் 'தோழர் வெங்கடேசன்'. விமர்சன ரீதியில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் மீரா கதிரவன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
''இந்த வாரம் வெளிவந்த ஐந்து படங்களில் 'தோழர் வெங்கடேசன்' நம்பிக்கையான படம் என்று விமர்சனங்களும் நண்பர்களும் சொன்னதால் சென்று பார்த்தேன். டைட்டில் வேறு ஆர்வத்தை மூட்டியது.
தன் வீட்டில் சிறிய அளவில் கோலி சோடாக்கள் தயாரித்து விற்கும் ஹீரோ. சாலையோர வண்டிக்கடை வைத்து வாழ்க்கை நடத்தும் தாயின் மகளாக கதை நாயகி. எளிமையான மனிதர்களைப் பற்றிய மிக எளிமையான படம். தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பட்ஜெட் மற்றும் வாய்ப்புகளில் கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுக நாயகன் அரிசங்கர் மற்றும் அறிமுக இயக்குனர் மகாசிவம் உட்பட எல்லோரும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள். எத்தனையோ முறை பயணித்த அரசுப் பேருந்துகள், விபத்துகள் குறித்து பல அறியாத தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
படத்தில் குறைகளும் இல்லாமலில்லை. பெரிய பட்ஜெட் மற்றும் நடிகர்களை வைத்துக்கொண்டு கதையையும் மக்களையும் பற்றி கவலைப்படாமல் பொருளாதார பலத்தின் வழியே ,எல்லா திரையரங்குகளையும் காட்சிகளையும் தனதாக்கிக்கொண்டு வெறுமனே அரட்டைகள் அடிக்கிற பல படங்களுக்கு மத்தியில் இது போன்ற முயற்சிகளை குறைகளைக் கடந்து ஆதரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.
படத்தை வெளியிட்டிருக்கும் நண்பர் இயக்குநர் சுசீந்திரன், அறிமுக இயக்குநர் மகாசிவன், நாயகனாக நடித்திருக்கும் அரிசங்கர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்''.
இவ்வாறு மீரா கதிரவன் தெரிவித்துள்ளார்.