

இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அரசியலில் இறங்கும் திட்டமில்லை என்று நடிகை த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் அரசியலில் களம் கண்டு வருகிறார்கள். குஷ்பு, ரோஜா, ஜெயப்பிரதா, ஹேமமாலினி உள்ளிட்ட பல நடிகைகள் பல்வேறு கட்சிகளில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நடிகைகள் வரிசையில் த்ரிஷாவும் அரசியலில் இறங்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவிடம் த்ரிஷா விருது வாங்குவது போன்ற புகைப்படத்தை மாற்றி இருந்தார். இதனால் பலரும் அதிமுக-வில் இணையப் போகிறார் த்ரிஷா என்று செய்திகள் இணையத்தை வட்டமிட்டன.
இச்செய்திக்கு த்ரிஷா மறுப்பு தெரிவித்திருக்கிறார். " சமீபத்தில் வெளியாகி இருக்கும் செய்திகள் போல நான் அரசியலில் எல்லாம் சேர திட்டமில்லை. இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அந்த எண்ணம் எனக்கு கிடையாது" என்று தெரிவித்திருக்கிறார்.