

பாடல் மற்றும் நடிக்க வாய்ப்புகள் இல்லாததால் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு வந்த பரவை முனியம்மாவுக்கு உதவ முன்வந்திருக்கிறார் விஷால்.
தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தூள்' படத்தின் மூலமாக அனைவராலும் அறியப்பட்டவர் பரவை முனியம்மா. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் பாடியும் நடித்தும் வந்தார். இறுதியாக சிவகார்த்திகேயன் நடித்த 'மான் கராத்தே' படத்தின் முதல் பாடலில் தோன்றினார்.
பட வாய்ப்புகள் மற்றும் பாடும் வாய்ப்புகள் மிகவும் குறைந்ததால் சாப்பாடுவதற்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுவதாகவும், மருந்துகள் வாங்குவதற்கு கூட பணமில்லை என்று பரவை முனியம்மா பேட்டி அளித்தார்.
இப்பேட்டியை முன்னிறுத்தி நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் மற்றும் விஷால் இருவரையும் மேற்கோள் காட்டி சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு "பரவை முனியம்மாவிடம் பேசி விட்டேன். தற்போதில் இருந்து அவரது தேவைகளை நான் பார்த்துக் கொள்வேன்" என விஷால் தெரிவித்திருக்கிறார்.