

'பாகுபலி' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ராஜமெளலிக்கு தொலைபேசி மூலமாக தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிக்க, ராஜமெளலி இயக்கத்தில் வெளியான படம் 'பாகுபலி'. மரகதமணி இசையமைக்க செந்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டது.
இப்படம் இந்திய அளவில் எந்த ஒரு படமும் செய்யாத வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. மிகக் குறைந்த நாட்களில் 100 கோடி, 200 கோடி, 300 கோடி என வசூலித்து பெரிய நடிகர்கள் அனைவரையும் மலைக்க வைத்து வருகிறது.
இந்நிலையில் 'பாகுபலி' படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு என்றால் எது, என்ற கேள்விக்கு ராஜமெளலி "கண்டிப்பாக ரஜினி சார் பாராட்டு தான். ஆனால், அவர் என்ன சொன்னார் என்பது என்னுடனே இருக்கட்டும். வெளியே கூற இயலாது" என்று தெரிவித்திருக்கிறார்.