

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருந்த படத்தின் படப்பிடிப்புக்கு இருந்த சிக்கல் தீர்ந்ததால் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறார்கள்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த் நடிக்கவிருந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. ப்ரியா ஆனந்த் அப்படத்தில் இருந்து விலக, பிந்து மாதவி அந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு கிளம்ப இருந்த நேரத்தில், தயாரிப்பாளர் தாணு அப்படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று பிரச்சினை எழுப்ப படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அப்படத்திற்கு என்ன பிரச்சினை என்று விசாரித்தபோது, " 'பீமா' படத்துக்கு சிக்கல் நிலவி வந்த நேரத்தில், ஐங்கரன் நிறுவனம் உதவி செய்தது. அதற்கு பதிலாக ஒரு படம் பண்ணி தருவதாக விக்ரம் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், இயக்குநர் ஆனந்த் ஷங்கர் தனது அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் தொகையை தாணுவிடம் வாங்கி இருந்தார்.
தாணு - ஐங்கரன் நிறுவனம் இருவருக்கும் இடையே, விக்ரம் படத்தை யார் தயாரிப்பது என்ற பேச்சுவார்த்தை தொடங்கியது. இறுதியில் ஐங்கரன் தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு கிளம்ப இருந்த நேரத்தில் தாணு, நான் தான் தயாரிப்பேன் என்று மீண்டும் புகார் அளித்தார்." என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது தாணு - ஐங்கரன் நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவுற்றதாகவும், ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க தாணு ஒப்புக் கொண்டார் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இன்னும் ஒரு வாரத்தில் மலேசியாவுக்கு படப்பிடிப்பு கிளம்ப இருக்கிறார்கள்.