

இந்திய இயக்குநர்கள் வெளிச் சந்தையில் இடம்பெறாததற்குக் காரணம் அவர்கள் வெகு விரைவில் தன்னிறைவு பெற்றுவிடுவது தான் என்று சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
67 வது சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழாவில் உள்ள இந்திய அரங்கை திறந்து வைக்க, ஃபிக்கி (இந்திய தொழில் கூட்டமைப்பு) பிரதிநிதியாக கமல்ஹாஸன் கலந்து கொண்டார்.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய அரங்கை மத்திய அரசும், ஃபிக்கி அமைப்பும் இணைந்து அமைத்திருந்தன.
விழாவில் உலகளாவிய கலைஞர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்த மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை மற்றும் ஃபிக்கி அமைப்புக்கு வாழ்த்து கூறிய கமல், "இந்த பெருமை வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொண்டிருப்பது மிகச் சிறப்பானது. இதன் மூலம் சினிமா வர்த்தகத்தை ஒருங்கிணைக்க முடியும். மற்றொரு பக்கம், இத்தகைய விழாக்களுக்கு தனியாக வர முடியாத இந்திய படைப்பாளிகள், இந்தியாவின் சார்பில் வந்து உலக கலைஞர்களுடன் உரையாட வாய்ப்பு இங்கு கிடைத்திருக்கிறது. அதேபோல இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் திறமைகளை உலகம் பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பையும் இந்த அரங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது.
இந்திய கலைஞர்களின் பிரச்சினையே தன்னிறைவு பெறுவது தான். இது தான் இந்திய திரைப்பட கலைஞர்கள் வெளிநாட்டு சந்தைகளில் பரிச்சயம் இல்லாமல் இருப்பதற்கு காரணம். அவர்களுக்கு பாதுகாப்பு, வெளி சந்தையில் இருக்கும் அபாயம் குறித்த சிந்தனைகளே அதிகமாக உள்ளது. இந்திய கலைஞர்கள் உலக அளவில் அதிகம் பாராட்டப்படுகின்றனர். அதன் உள்ளடக்கத்தை புரிந்து கொண்டு இந்திய படைப்பாளிகள் வெளி வர வேண்டும்” என்றார்.
விழாவில் பல்வேறு நாடுகளின் கலைஞர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், தன் பேச்சின் மூலம் பலரது கவனத்தையும் கவர்ந்தார்.