

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவை அணுகினார்கள். அதற்கு நயன்தாரா "நான் சொன்ன வார்த்தையில் எப்போதும் பின் வாங்குவதில்லை. விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க முடியாது" என்று கூறி அனுப்பிவிட்டார்.
விக்ரம் மீது நயன்தாரா கொண்டுள்ள கோபத்துக்கு ஒரு சம்பவம் தான் காரணம் என்கிறார்கள். என்ன அது?
'கள்வனின் காதலி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்க நயன்தாரா தேதிகள் ஒதுக்கி இருந்தார். அப்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடிக்க தேதிகள் கேட்டு அணுகினார்கள். அதற்கு நயன்தாரா "இல்லை.. தேதிகள் ஒதுக்கிவிட்டேன். வேண்டுமானால் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துக் கொண்டே விக்ரமுடன் நடிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால், ஒரே நேரத்தில் எஸ்.ஜே.சூர்யா, விக்ரம் இருவருடனும் நாயகியாக நடிப்பதை விக்ரம் படக்குழு விரும்பவில்லை. "இல்லை மேடம்.நீங்க எங்களுக்கு மட்டும் தேதிகள் ஒதுக்கி கொடுங்கள். விக்ரம் எவ்வளவு பெரிய நடிகர், அவருடைய மார்க்கெட் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டுள்ளார்கள்.
இதனால் மிகவும் கோபமடைந்த நயன்தாரா "இப்போது மட்டுமல்ல.. இனிமேல் எப்போதுமே விக்ரமுடன் நடிக்க மாட்டேன். சின்ன நடிகர், பெரிய நடிகர் என்று எப்போதுமே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை. ஆனால், நீங்கள் வித்தியாசம் பார்க்கிறீர்கள். எனக்கு இது பிடிக்காது. நான் இப்படிச் சொன்னேன் என்று நீங்கள் விக்ரமிடம் சொன்னாலும் நான் கவலைப்பட மாட்டேன்" என்று கூறி அனுப்பிவிட்டார்.
விக்ரமுடன் நடிக்க வேண்டும் என்று யார் கேட்டாலும், நயன்தாராவின் பதில் எப்போதுமே 'நோ' தான்.
முந்தைய பாகம்:>அறுந்த ரீலு 11: இயக்குநர் மணிகண்டனை கடுப்பேற்றிய காக்கா