

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.
2008ம் ஆண்டு பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, ஷம்மு உள்ளிட்ட பலர் நடிக்க ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான படம் 'காஞ்சிவரம்'. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் என்ற இரண்டு தேசிய விருதுகளை வென்றது 'காஞ்சிவரம்'. காஞ்சிபுரத்தில் பட்டு சேலை நெய்யும் ஒரு தொழிலாளியின் வாழ்க்கை கஷ்டங்களை முன்னிறுத்தி இப்படம் வெளியானது.
தற்போது மீண்டும் 'காஞ்சிவரம்' படக்குழு இணைந்து படம் பண்ண திட்டமிட்டு இருக்கிறார்கள். ஏ.எல்.விஜய் தயாரிக்கவிருக்கும் இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்க பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.
எய்ட்ஸ் விழிப்புணர்வை மையப்படுத்தி எடுக்கப்படவிருக்கும் இப்படத்தை, மிகவும் சோகமாக இல்லாமல், காமெடி கலந்து கூற இருக்கிறோம் என்கிறது படக்குழு. ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.