

இன்னும் இரண்டு வருடங்களாவது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒருவேளை சரியான நேரம் அமைந்தால் படம் இயக்குவேன் என்று தனுஷ் பேசினார்.
'மாரி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று(வியாழக்கிழமை) நடந்தது.
தனுஷ்,விஜய் யேசுதாஸ், ரோபோ ஷங்கர், அனிருத், சரத்குமார், இயக்குநர் பாலாஜி மோகன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இதில் தனுஷ் பேசியதாவது:
நிறைய பேர் 'மாரி' லுக் எப்படி செட்டாச்சு என்று கேட்கிறார்கள். இணையத்தில் நிறைய லுக்ஸ் பார்த்துக்கொண்டு இருந்தோம். இயக்குநர் பாலாஜி மோகன் 15 புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு வந்தார். அதில் ஒரு புகைப்படம் பிடித்திருந்தது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் நகை, கூலர்ஸ், மீசை என்று செம இன்ட்ரஸ்டிங்கா இருந்தார். அதைப் பார்த்து ஸ்டைல் பண்ணேன். அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது.
'மாரி' படம் கண்டிப்பாக தெலுங்கில் டப் ஆகும். இரண்டு, மூன்று பெரிய படங்கள் தெலுங்கில் ரிலீஸ் ஆவதால் காத்துக்கொண்டிருக்கிறோம். சரியான நேரத்தில் தெலுங்கிலும் 'மாரி' ரிலீஸ் ஆகும்.
'பாகுபலி' படம் 'மாரி' படத்தைப் பாதிக்காது. 'பாகுபலி' ஒரு வாரத்துக்கு முன்பே ரிலீஸ் ஆகிவிட்டது. இரண்டு படங்களுக்கும் வெவ்வெறு விதமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இரண்டு படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரே நாளில் இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி இருந்தால் க்ளாஷ் இருந்திருக்கலாம். ஒரு வாரம் கழித்து 'மாரி' ரிலீஸ் ஆவதால் எந்த பாதிப்பும் இருக்காது.
இயக்குநரிடம் புகைப்பிடிக்கும் காட்சியில் நான் நடிக்கமாட்டேன் என்று சொல்லமுடியாது. அவர் கிரியேட்டிவிட்டியை குறைக்கும் விதமாக அது மாறிவிடும். தேவையில்லாத படங்களில் நான் புகைப்பிடிக்கமாட்டேன். 'அனேகன்' படத்தில் எந்த இடத்திலும் நான் புகைப்பிடிக்கவில்லை.
லோக்கல் டானாக நடிக்கும்போது புகைப்பிடிக்கமாட்டான். தண்ணி அடிக்கமாட்டான் என சொல்லும்போது கொஞ்சம் இடிக்கும். நெருடலாக இருக்கும். என் கேரக்டருக்கு தேவைப்படும்போது மட்டுமே புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கிறேன்.
ஆனால், என் நிஜ வாழ்வில் நான் புகைப்பிடிப்பதில்லை. என்னை யாராவது இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால் நிஜ வாழ்வில் நான் யாரோ, அதையே இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்ளுங்கள்.
எனக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதவும், படம் இயக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கான தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை.
இப்போது நடிப்பில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. இன்னும் இரண்டு வருடங்களாவது நடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒருவேளை சரியான நேரம் அமைந்தால் படம் இயக்குவேன்'' என்று தனுஷ் பேசினார்.