

உயர்தரமான இசை நுணுக்கங்களை கொண்டுவந்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று இளையராஜா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''எம்.எஸ்.வி அண்ணாவின் இசைப் புலமையை பற்றி நன்றாக அறிந்தவர்கள் இங்கு யாருமே இல்லை என்பது என்னுடைய திட்டவட்டமான கருத்து. அவர் தன்னுடைய இசையமைப்பில் மிகவும் உயர்தரமான இசை நுணுக்கங்களையெல்லாம் கொண்டுவந்தார். அதை ஊன்றி கவனித்ததால்தான் நான் ஒரு இசையமைப்பாளராகவே ஆனேன் என்பதை சத்தியமாக சொல்லுகிறேன்.
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய மானசீக குருவாக இருந்த சி.ஆர்.சுப்புராமன் எப்படி என்னுடைய உயிரில் உடலில் கலந்திருந்தாரோ, அப்படியே எம்.எஸ்.வியும் என் உயிரில், உடலில், ரத்தநாளங்களில் இதயதுடிப்பிலும் மூச்சுக்காற்றிலும் கலந்திருந்தார்
‘தேவதாஸ்’ படத்தை சி.ஆர் சுப்புராமனால் முடித்துக்கொடுக்க முடியாமல் போனது. அவரது ஆசியினால் அந்த படத்தின் பாடல்களையும் பின்னணி இசைகோர்ப்பு பணியையும், முடித்துக்கொடுத்தார் எம்.எஸ்.வி. படத்தில் பிற பாடல்கள் நன்றாக இருந்தபோதும் எம்.எஸ்.வி. இசையமைத்த ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்ற பாடல் அவருக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த பாடலின் வெற்றியால் ‘தேவதாஸ்’ படம் நீண்டநாள் ஓடியது.
அதேபோல் எம்.எஸ்.வியின் இசையினால் ஓடிய படங்கள் எண்ணிலடங்காதவை. அந்த இசை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதவை. அந்த தாக்கத்தின் அடையாளம்தான் இளையராஜா என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
பொதுவாக கலைஞர்களை வாழும் காலத்தில் அரசியலில் இருப்பவர்கள் கண்டுகொள்வதில்லை. எம்.எஸ்.வி. அவர்களும் மத்திய அரசின் விருதுகளை தேடிப் போகவில்லை. ஆனால் எம்.எஸ்.வி வாழும் காலத்திலேயே ஜெயலலிதா தமிழக அரசு மூலம் தனிப்பட்ட முறையில் அரசின் சார்பாக மரியாதை செய்து அவருக்கு கவுரவம் செய்தார். இது பாராட்டுக்குரியது'' என்று இளையராஜா கூறியுள்ளார்.