வாலு படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்: சிம்பு

வாலு படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்: சிம்பு
Updated on
1 min read

இறை நம்பிக்கையுடன் 'வாலு' படத்தை நிச்சயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியும் என நம்புவதாக சிம்பு தெரிவித்திருக்கிறார்.

விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ஜூலை 17ம் தேதி சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.

'வாலு' படம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 13ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம், அதுவரை 'வாலு' திரைப்படம் வெளியிட தடை விதித்தும், தற்போதைய நிலையிலேயே நீடிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. மேலும், இப்பிரச்சினைத் தொடர்பாக டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், தற்போது சிம்பு தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த அறிக்கையில் சிம்பு "'வாலு' படத்தை வெளியிட எனது தந்தை உரிமம் பெற்றுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு தந்தையாக மட்டுமே அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. ஒரு புகழ்பெற்ற இயக்குநர் - தயாரிப்பாளர் என்ற முறையிலும் அவர் இம்முடிவை எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவர் மிகவும் விரும்பினார். அதனாலேயே இந்த முடிவை எடுத்தார்.

இம்மாத மத்தியில் 'வாலு' படத்தை வெளியிட முடிவு செய்தோம். படம் தொடர்பான பிரச்சினைகளை ஒவ்வொன்றாக சரி செய்து வந்தோம். ஆனால், தற்போது வேறு ஒரு தரப்பும் படத்தை வெளியிட உரிமை கோரியுள்ளது.

ஒரு நடிகனாக எனது கடமையை செய்துவிட்டேன். எனது ரசிகர்கள் போலவே நானும் படத்தைக் காண ஆர்வமாக இருக்கிறேன். இந்தப் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடாமல் செய்ய சிலர் மறைமுகமாக சதியில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தருணத்தில், எனது ரசிகர்களின் அன்பும், வாழ்த்தும், ஊடகங்களின் ஆதரவும் எனக்கு பெரும் பலத்தை தருகின்றன. இந்த பலத்துடனும், இறை நம்பிக்கையுடன் படத்தை நிச்சயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியும் என நான் நம்புகிறேன்.

சோதனைகளும், நெருக்கடியும் அதிகரித்தால் அது நம்மை விட்டுச் செல்லும் நேரம் வந்துவிட்டது என்றே அர்த்தம்" என்று தெரிவித்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in