

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'எந்திரன் 2' படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு இருக்கின்றன.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'எந்திரன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்தது. 2010ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி வசூலைக் குவித்தது.
தற்போது ரஜினி - ஷங்கர் இருவரும் மீண்டும் இணைந்து 'எந்திரன் 2' படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார்கள். 'எந்திரன் 2' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், கமல் மறுத்துவிட்டார். அதனைத் தொடர்ந்து விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஷங்கர். ரஜினிக்கு வில்லனாக நடிக்கவிருப்பது யார் என்பது தான் தற்போதைய கோடம்பாக்க டாக்காக இருக்கிறது.
இந்நிலையில், 'எந்திரன் 2' படத்திற்கான முதற்கட்ட பணிகள் துவங்கி இருக்கின்றன. காட்சிகள் வடிவமைப்பு அனைத்துமே முடிந்து, எந்த காட்சியில் கிராபிக்ஸ் எப்படி வர வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டார் ஷங்கர். அதற்கான பணிகள் துவங்கி இருக்கின்றன.
'எந்திரன் 2' படத்தில் நாயகனாக ரஜினி, ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். லைக்கா நிறுவனம் வழங்க ஐங்கரன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
ரஞ்சித் படத்தை 2015ம் ஆண்டிற்குள் முடித்துவிட்டு, 2016ம் ஆண்டு துவக்கம் முதல் 'எந்திரன் 2' படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி.