

'வாலு' படத்துக்காக விஜய் அண்ணா செய்த உதவியை என்றைக்குமே மறக்க மாட்டேன் என்று நடிகர் சிம்பு தெரிவித்தார்.
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிக்க நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் படம் 'வாலு'. தமன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. சிம்பு சினி ஆர்ட்ஸ் இப்படத்தை வெளியிட முயற்சிகள் நடைபெற்று இருக்கிறது.
'தலைவா' படத்துக்கு பிரச்சினை ஏற்பட்ட போது முதலில் குரல் கொடுத்தவர் சிம்பு தான், அதனால் 'வாலு' படத்துக்கு விஜய் உதவி புரிந்துள்ளார் என்று ஒரு தரப்பினரும், விஜய் பொருள் உதவி செய்திருக்கிறார் என்று ஒரு தரப்பினரும் செய்திகள் வெளியிட்டு வந்தார்கள்.
இச்செய்தியின் உண்மை நிலவரம் அறிய சிம்புவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, "விஜய் அண்ணா பொருள் உதவி எல்லாம் எதுவும் பண்ணவில்லை. அவருடைய 'தலைவா' படத்துக்கு பிரச்சினை எழுந்த போது முதலில் குரல் கொடுத்தேன்.
தற்போது 'வாலு' படத்துக்கு பிரச்சினை எழுந்த போது அவருக்கு நெருக்கமான விநியோகஸ்தர்களிடம் என்ன பிரச்சினை என்றாலும் முடித்து கொடுங்கள். அப்படம் வெளியாக வேண்டும் என்று தெரிவித்தார். அவருடைய இந்த உதவி என்றைக்குமே மறக்க முடியாது.
ஆகஸ்ட் 14ம் தேதி 'வாலு' வெளியாக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் நல்ல செய்தி கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.