

பெப்சி அமைப்பு அறிவித்த ஊதிய உயர்வுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் இன்று படப்பிடிப்புகளை ரத்து செய்துள்ளது.
திரைப்பட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் துக்கும் (பெப்சி), தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெப்சி அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென்று புதிய ஊதிய உயர்வை அறிவித்தது. இதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைக் கண்டித்து 27-ம் தேதி (இன்று) முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தனர். அதன்படி இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் டி.சிவா கூறும்போது, “இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமுக முடிவும் ஏற்படவில்லை. இதனை அடுத்து படப்பிடிப்பை நிறுத்த பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் 27-ம் தேதி படப்பிடிப்புகள் ரத்தாகிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சி அமைப்புக்கும் இடையேயான பேச்சு வார்த்தை 27-ம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் தொடங்குகிறது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.