Last Updated : 15 Jun, 2015 02:40 PM

 

Published : 15 Jun 2015 02:40 PM
Last Updated : 15 Jun 2015 02:40 PM

பாகுபலி குழு கவுரவித்த தமிழ் இளைஞரின் ரீமிக்ஸ் அவதார்

| 'பாகுபலி' - 'ரீமிக்ஸ் மாமா'வின் அவதார் வெர்ஷன் வீடியோ கீழே |

யூடியூப் தளத்தில் தனது 'ரீமிக்ஸ் மாமா' பக்கத்தில் ரீமிக்ஸ் வீடியோக்கள் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர்தான் சென்னை இளைஞர் ஜெகன். இவரது சமீபத்திய வெளியீடு 'பாகுபலி'-யின் அவதார் வெர்ஷன். ஏற்கெனவே பல ஹாலிவுட் படங்களுடன் தமிழ்ப் பட காட்சிகளைக் கலவை செய்து கலக்கிய சுவாரசியமான வீடியோக்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் பிரபலமானவர் தான் இந்த 'ரீமிக்ஸ் மாமா'. தற்போது இவரது வளர்ச்சி டோலிவுட்டுக்கும் சென்றுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் 'பாகுபலி' நடிப்பில் தமிழ், தெலுங்கு என 2 மொழியிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'பாகுபலி'. இந்தப் படத்துக்கான இசை வெளியீடு சனிக்கிழமை நடந்தது. இதில், ஆச்சர்யமூட்டும் விதமாக அந்தப் படத்தின் ட்ரைலரை வைத்து ரீமிக்ஸ் மாமா செய்த 'பாகுபலி'-யின் அவதார் வெர்ஷன் வீடியோவும் திரையிடப்பட்டது.

பொதுவாக, வெளிவர காத்திருக்கும் திரைப்படத்தின் ட்ரையலரையோ அல்லது பாடல் காட்சியையோ வேறு படத்தோடு ரீமிக்ஸ் செய்தால், நிச்சயம் படக் குழுவின் சார்பில் எதிர்ப்பு கிளம்பும். குறைந்தபட்சம் வீடியோவை அலேக்காக தூக்கி விடுவார்கள். ஆனால் 'பாகுபலி' ட்ரெய்லரை அவதார் வெர்ஷனுடன் கோத்து 'ரீமிக்ஸ் மாமா' செய்த எடிட்டிங், டோலிவுட் ரசிகர்களை ஈர்த்ததை அடுத்து, படக்குழு வழக்கமான போக்கை விட்டுவிட்டு, ரீமிக்ஸ் வீடியோவை தங்களது இசை வெளியீட்டு விழாவிலேயே திரையிட்டது.

'பாகுபலி' அவதார் வெர்ஷனுக்கு இசை வெளியீட்டு விழாவில் டோலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு.

இது குறித்து 'ரீமிக்ஸ் மாமா'-வின் ஒரிஜினல் வெர்ஷனான, அதாவது அந்தப் பக்கத்தின் நிறுவனரான ஜெகனை தொடர்புகொண்டு, இது எப்படி நடந்தது என ஆர்வத்துடன் கேட்டேன்.

"வழக்கமாக வெளியாக இருக்கும் எந்தப் படத்தையும் நான் விடுவதில்லை. அதை எப்படி ரீமிக்ஸ் செய்யலாம் என்று யோசிப்பேன். அதுபோல தான், பிரம்மாண்டமான பாகுபாலி ட்ரைலரை மற்றொரு பிரம்மாண்ட படைப்பான அவதாருடன் இணைத்து எடிட் செய்தேன்.

எப்போதும் போல எனது ரீமிக்ஸ் ஃபாலோயர்ஸ்க்காக எனது ப்ளாகில் அதனை அப்லோட் செய்தேன். பிரபாஸ் ரசிகர்களுக்கு அது மிகவும் பிடித்துவிட்டது.

அவர்கள் அதனை தொடர்ந்து பகிர, 'பாகுபலி' குழுவின் பார்வைக்கு ரீமிக்ஸ் வீடியோ சென்றது. அது அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்க, அதனை அவர்கள் இசை வெளியீட்டு விழாவிலேயே திரையிட்டு உள்ளனர்.

இந்த வருடம் தான் எனது விஸ்காம் படிப்பை முடித்து உள்ளேன். சோ, சும்மா இருந்த நேரத்துல பாகுபாலி இசை வெளியீட்டு விழாவின் லைவ் ஷோவை யூடியூபில் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென நான் எடிட் செய்த வீடியோவை அவர்கள் விழாவில் போட்டனர். எனக்கு ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவே இல்லை.

ராஜமௌலி, பிரபாஸ், அனுஷ்கா, தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள் பலர் இருந்த அந்த அரங்கில் எனது வீடியோ திரையிடப்பட்டது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

எனது எடிட்டிங் வெர்ஷன் 'பாகுபலி' குழுவிடம் சிக்க பிரபாஸ் ரசிகர்கள்தான் காரணம். இங்கு விஜய், அஜித் ரசிகர்கள் எனது எடிட்டிங் வீடியோவை பார்த்து நன்றாக இருந்தால் ரசிப்பதும், கொஞ்சம் கலாய்ப்பாக இருந்தால் என்னை வறுத்தெடுப்பதும் வழக்கம். அப்படி தான், பிரபாஸ் ரசிகர்கள் வீடியோவைப் பார்த்து அதனை ஷேர் செய்துள்ளனர். இது ஆந்திராவில் இருக்கும் ஏதோ ஒரு டிவி சேனலிடம் சிக்க, எப்படியோ 'பாகுபலி' டீமின் கவனத்துக்கும் இது சென்றுள்ளது.

என்னவோ, இது எனது வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம். சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை பலர் பாராட்டுகின்றனர். பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட பல பிரபலங்கள் என்னை வாழ்த்தினர். ரொம்ப சந்தோஷமா இருக்கு. வேறு என்ன செய்ய, எதுவும் புரியல. 'பாகுபலி' படக்குழுவுக்கு எனது நன்றி" என்றார்.

"எப்படியோ டோலிவுட்டுக்கு ரீச் ஆய்டீங்க. அடுத்தது என்ன முழு நேர எடிட்டிங் துறைதானே? என்றதற்கு, இல்லவே இல்லை, நான் நிறைய தெரிஞ்சுக்க வேண்டியது இருக்கு. யூடியூப் வீடியோவை பார்த்து தான் எடிட்டிங் கத்துக்கிட்டு இருக்கேன்.

இப்ப தான் விஸ்காம் முடிச்சிருக்கேன். யார் கிட்டயாவது அசிஸ்டன்டா சேரனும். புரொபஷனல் எடிட்டர் கிட்ட வேல பாத்து நிறைய தெரிஞ்சுக்கணும். இது இல்லாம, இயக்குநர் ஆகவும் கனவு இருக்கு. பொருத்திருந்து பார்ப்போம்" என்று கூலாக சொன்னார் ஜெகன்.