ஒரு கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஆகாது: இயக்குநர் சசிகுமார்

ஒரு கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஆகாது: இயக்குநர் சசிகுமார்
Updated on
1 min read

'ஒரு கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஆகாது' என்று இயக்குநர் சசிகுமார் தெரிவித்தார்.

சசிகுமார் தயாரிப்பில், பாலுமகேந்திரா இயக்கிய 'தலைமுறைகள்', சென்ற ஆண்டிற்கான தேசிய விருதுகளில் 'சிறந்த தேசிய ஒருமைப்பாட்டுத் திரைப்படம்' என்ற விருதினை வென்றது.

இயக்குநர் பாலு மகேந்திரா காலமானதால், டெல்லியில் நடைபெற்ற விழாவில் தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் இயக்குநர் பாலுமகேந்திரா சார்பில் அவருடைய பேரன் ஷ்ரேயாஸ் ஆகியோர் அந்த விருதைப் பெற்றனர்.

தேசிய விருது வென்றது குறித்து 'தலைமுறைகள்' படக்குழு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது. அச்சந்திப்பில் தயாரிப்பாளர் சசிகுமார் பேசும்போது, "தலைமுறைகள் படத்துக்கு தேசிய விருது கிடைச்சதுல எவ்வளவு சந்தோஷம் இருக்கோ, அதே அளவுக்கு வருத்தமும் இருக்கு. ஏன்னா இந்த ‘தலைமுறைகள்’ படத்தை அவ்வளவு தூரத்துக்கு அவர் நேசிச்சி இயக்கின பாலுமகேந்திரா சார் இப்ப இல்லையேங்கிற வருத்தம் இருக்கு.

நாம பாலுமகேந்திரா மாதிரியான நல்ல கிரியேட்டர்களை வயசாகிப் போச்சுன்னு ஒதுக்கி வச்சிடுறோம். ஆனா ஒரு கிரியேட்டருக்கு எப்போதுமே வயசு ஆகாது, அவங்க எப்போ வேணாலும் படம் எடுக்கலாம், எந்த வயசிலேயும் படம் எடுக்கலாம்ங்கிறதை நிரூபிச்சிட்டுப் போனவர் பாலுமகேந்திரா சார்.

அதனால தான் நான் சொல்றேன் இப்ப இருக்கிற தலைமுறை போன தலைமுறையை கௌரவிக்கணும். நம்ம கூட அப்படிப்பட்டவங்க இன்னும் நெறைய பேர் இருக்காங்க. அதையெல்லாம் நாம சேர்ந்து செய்யணும்.

இந்த விருதை அவர் சார்பா நானும், அவரோட பேரனும் சேர்ந்து மேடையில வாங்கினோம். விருதை வாங்கும் போது ஒரே ஒரு விஷயம் தான் என் மனசுக்குள்ள திரும்ப திரும்ப வந்துட்டுப் போச்சு.

அது என்னன்னா, படத்தோட கிளைமாக்ஸ்ல அவர் இறந்து போன பிறகு அவரோட பேரன் தான் அவர் சார்பா விருதை மேடையில வாங்குவான். அதேமாதிரி அவரோட நிஜ வாழ்க்கையிலும் இந்த தேசிய விருதை அவரோட பேரன் தான் மேடையில வாங்கினார். அதுவும் ஒரு நெகிழ்வான விஷயமா எனக்குள்ள இருந்துச்சு.

இந்த விருதை அவர் எனக்கு பரிசாக் குடுத்துட்டு போனது மட்டுமில்லாம தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் சமர்ப்பணம் பண்ணிட்டு போயிருக்காரு. அதனால் அவருக்கு என்னோட நன்றியை தெரிவிச்சிக்கிறேன்,” என்று கூறினார்.

'தலைமுறைகள்' படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in