

நடிகை மதுபாலா, சத்யராஜுடன் இணைந்து 'மஹா நட்சத்திரம்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதுமுக இயக்குநர் பரத் மார்டின் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.
தமிழில் 'ரோஜா', 'ஜென்டில்மேன்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த மதுபாலா, கடைசியாக 'வாயை மூடி பேசவும்' திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் 'மஹா நட்சத்திரம்' படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய மதுபாலா, "நான் எப்போதுமே வெற்றிபெற்ற இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதையே விரும்புவேன். நான் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே பிரபலமானவர்களின் படத்தில் தான் தோன்றியுள்ளேன். இந்த முறை புதிய அணியுடன் நடிக்கவுள்ளேன். ஏனென்றால் அந்தக் கதை என்னை வெகுவாக ஈர்த்துவிட்டது.
இது எனது திரையுலக வாழ்க்கையில் மற்றொரு கதாபாத்திரமாக இல்லாமல், இது வலிமையானதாக இருக்கும். தயாரிப்பு, நாயகன் என எல்லாவற்றையும் விட, இந்த பாத்திரப்படைப்புதான் என்னை சம்மதிக்க வைத்தது. துணிந்து ஒரு வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். சிறப்பாக அமையும் என நம்புகிறேன்"என்றார்.
'மஹா நட்சத்திரம்' திரைப்படத்தை பவன் குமார் என்பவர் தயாரித்து நாயகனாக நடிக்கவுள்ளார். தெலுங்கிலும் தயாராக இத்திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்குகிறது.