

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா 2' திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. தற்போது 50 நாட்களைக் கடந்து ஓடி வரும் இத்திரைப்படம், இன்னமும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவருவது குறிப்பிடத்தக்கது.
ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், 'காஞ்சனா' முதல் பாகத்தைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 'காஞ்சனா 2'-ம் பாகம் வெளியானது. லாரன்ஸ், நித்யா மேனன், தாப்ஸி, கோவை சரளா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'காஞ்சனா 2', விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
இது குறித்து பேசிய பாக்ஸ் ஆஃபிஸ் வல்லுநர் த்ரிநாத், "தமிழ் சினிமாவில் இந்த வருடம் முதல் ப்ளாக்பஸ்டர் படமாக 'காஞ்சனா 2' உருவாகியுள்ளது. டிக்கெட் விற்பனையில் மட்டும் இத்திரைப்படம் ரூ.108 கோடியை அள்ளியுள்ளது" என்றார்.
ரூ.17 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் 'காஞ்சனா 2', சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் லாபகரமான படமாக அமைந்துள்ளது.
தற்போது 'காஞ்சனா 3'-ஆம் பாகத்துக்கான கதை தயாராகி வருவதாக லாரன்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.