Published : 22 Jun 2015 12:26 PM
Last Updated : 22 Jun 2015 12:26 PM

விநியோகஸ்தர்களின் வசீகரன் விஜய்!

இன்று - ஜூன் 22 - நடிகர் விஜய்யின் பிறந்தநாள்

செந்தூரப்பாண்டி, ரசிகன், விஷ்ணு முதலான படங்கள் வெளியானபோது, சினிமா விமர்சகர்கள் மட்டுமல்ல... ஜோதிடர்களாலும் கணித்திருக்க முடியாது, நடிகர் விஜய்யின் எதிர்காலத்தை!

தனது தந்தையின் உறுதுணையுடன் சினிமாவுக்கு வந்த விஜய்யின் ஹிஸ்டரி உங்களில் பலருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கலாம். ஆனால், அந்த முகவரியைக் கொண்டு, தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, கெமிஸ்ட்ரியை மாற்றிக்கொள்ள அவர் பட்ட மெனக்கெடல்கள் அனைத்தும் அவருக்கு நெருக்கமான மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்.

சினிமாவை உன்னதமான கலையாகக் கருதி, திரைப்படங்களைச் செதுக்கும் கலைஞர்கள் மட்டுமல்ல... மூன்று மணி நேரம் தனிமனித துயரம் மறந்து நடிப்பு, நடனம், நகைச்சுவை, ஆவேசம், ஆரவாரம் மூலமாக மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களும் கொண்டாடப்பட வேண்டியவர்களே. இதில், நடிகர் விஜய் இரண்டாவது ரகம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

'காக்கா முட்டை'கள் மூலம் கலைத் திறன் ரீதியாக காலரைத் தூக்கிக்கொள்வது ஒரு வகை என்றால், இந்திய அளவில் தமிழ் சினிமா மீது கவனம் படர வழிவகுப்பதற்கு தொடர்ச்சியான வர்த்தக வெற்றிகளும் தேவை என்பது கோடம்பாக்கம் அறிந்த ஒன்றுதான். அப்படி, தமிழ் சினிமாவுக்கு தன்னாலான பங்களிப்பைத் தந்து வருபவர் நடிகர் விஜய்.

ஒரு படத்தின் வெற்றி என்பது, அப்படத்தின் பங்குவகித்த நடிகர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், உறுதுணைத் தொழிலாளர்கள் தொடங்கி தயாரிப்பாளர் வரை அனைவருக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆனால், படம் வெளியான மறுநொடியே ஆன்லைனிலும், திருட்டு டிவிடி வடிவிலும் சினிமா வர்த்தகத்துக்கு உலை வைக்கும் பிரச்சினையில் பெரிதும் பாதிக்கப்படும் விநியோகஸ்தர்களின் நிலையை ஒரு சாதாரண ரசிகரால் புரிந்துகொள்வது கடினம்.

அவ்வாறு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் தற்போதைய சூழலிலும், அந்த விநியோகஸ்தர்களுக்கும் வசீகரானாகத் திகழும் திரைக்கலைஞர்களின் விஜய் முக்கிய இடத்தை வகிப்பது கவனிக்கத்தக்க அம்சம்.

விநியோகஸ்தர்களின் வசீகரன்!

ரஜினி - கமல் காலக்கட்டத்துக்குப் பிறகு, நாயகனை முன்னிறுத்தி வரும் வர்த்தகப் படங்களுக்கு முதலில் அச்சாரம் போட்டவர் விஜய். அவர் நடித்த 'திருமலை' படம்தான் முதன்முதலில் நாயகனை முன்னிருத்தி வந்த கமர்ஷியல் படம். அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 'கில்லி', 'சிவகாசி', 'திருப்பாச்சி', 'துப்பாக்கி', 'கத்தி' என தொடர் வெற்றிகள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகன் என்ற இடத்தை பிடித்தவர் விஜய்.

'விஸ்வரூபம்' விவகாரம் முதல் இன்னும் முற்றுபெறாத 'லிங்கா' சிக்கல்கள் வரையிலான காலக்கட்டத்தில் விநியோகஸ்தர்கள் பலரிடம் பேசினேன். அப்போது, நான் கேட்காமலேயே நடிகர் விஜய் பற்றி அவர்கள் கூறிய தகவல்கள்தான் இந்தக் கட்டுரையின் முக்கிய அம்சம்.

"தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என மூவர் தரப்புக்கும் லாபம் தரும் படங்கள் என்றால், நிச்சயம் அவை விஜய் படங்கள்தான். ஏனென்றால், மற்ற நடிகர்களின் படங்கள் எல்லாம் அதிகபட்சம் 10 நாட்கள்தான். அதற்குப் பிறகு கூட்டம் குறைய ஆரம்பிக்கும். ஆனால், விஜய் படங்கள் பி மற்றும் சி சென்டர்களில் 40 நாட்கள் வரை எங்களுக்கு வசூல் தருகிறது.

அந்த 40 நாட்கள் வரும் கூட்டத்தால் திரையரங்கு கேன்டீன் வியாபாரம், விநியோகஸ்தருக்கு வரும் பணம், அதன் மூலமாக தயாரிப்பாளருக்கு வரும் பணம் என கணக்கிட்டால் எங்களின் நம்பிக்கை நாயகன் விஜய் மட்டுமே. அனைவருமே 'சுறா'தான் விஜய் நடித்ததில் மோசமான படம் என்றார்கள். அப்படம் எனக்கு லாபம் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா" என்று என்னிடம் பதில் இல்லாத கேள்வி ஒன்றை கேட்டு வியக்கவைத்தார் ஒரு விநியோகஸ்தர். இது ஒரு சாம்பிள் மட்டுமே.

விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து யோசித்து பார்த்தால், ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. விஜய் படங்கள் அனைத்துமே குறைந்தபட்சம் 40 நாட்கள் ஓடுகின்றன. மற்ற படங்கள் மூலம் ஏற்படும் எதிர்பாராத இழப்புகளைக்கூட விஜய் படங்கள் மூலம் அவர்கள் ஈடுகட்டிக்கொள்கிறார்கள். இதை யார் சொன்னது என்று கேட்கிறீர்களா? தேவாக்களே சொன்னார்கள்.

அரசியல் களம் காணும் விஜய்

சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நேரத்தில்கூட அரசியலில் நிலவும் மாற்றங்களில் எப்போதுமே உன்னிப்பாக கவனிப்பார் விஜய். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி என அனைவரிடமும் நெருக்கம் காட்ட விரும்புபவர் விஜய்.

அரசியலுக்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, "நடிகனாகணும்னு ஆசைப்பட்டேன். நான் நினைச்சதைவிட மிகப் பெரிய இடத்தில் மக்கள் என்னை உட்காரவெச்சு இருக்காங்க. அதுபோல, இன்னொரு இடத்திலும் அதேமக்கள் என்னை அமரவைக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை. யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வர்றேன்" என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் விஜய். விரைவில் அரசியலில் களம் காணுவதற்கு சரியான நேரத்திற்காக விஜய் மட்டுமல்ல... அவரது ரசிகர்களும் 'வெயிட்டிங்'!

ஆவேசமும் அமைதியும்!

சரியான பின்புலம் இல்லாமல் சினிமாவில் சிறப்பிடம் பெறுவது என்பது மிகப் பெரிய சாதனை. அதற்கு இணையானதுதான், பின்புலத்தின் துணையுடன் சினிமாவில் அடியெடுத்து வைத்தாலும், சினிமாவில் உச்சத்தைத் தொட்டு, அதை உறுதியுடன் தாங்கிக்கொண்டிருப்பதும் என்பது விஜய் கடந்து வந்த பாதை மூலம் அறியலாம்.

தமிழ் சினிமாவுக்கு பின்புலம் மட்டுமே முக்கியம் என்றால், இன்றைய சூழலில் கோலிவுட்டில் வாரிசுகளின் ஆதிக்கம் மட்டுமே இருக்கும். கோலிவுட்டில் தற்போது நிலையான இடத்தில் உள்ள வாரிசுகளின் எண்ணிக்கையும், வந்த வேகத்தில் இருந்த சுவடு தெரியாமல் காணாமல் போய்விட்ட வாரிசுகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டால் இந்த வித்தியாசத்தைக் கண்டறியலாம். அந்த வித்தியாசத்துக்கு வித்திடுவது - திறமையும் அணுகுமுறையும் மட்டுமே!

ஆரம்பித்ததில் இருந்து இப்போது இவ்வளவு பெரிய உயரத்துக்கு வந்துவிட்டாலும் விஜய் எப்போதுமே தன்னுடைய இடத்தை தக்கவைக்க வேண்டும் என்பதில் மிகவும் முனைப்பாக இருப்பார். முன்பு போல அல்லாமல் தற்போது ஒரு கதையை கேட்டுவிட்டு அது சரியாக இருக்குமா, ரசிகர்களின் மனநிலை என்ன என்பதை தீவிரமாக ஆராய்ந்தே பின்னரே ஒப்புக் கொள்கிறார்.

ஒரு நடிகனின் வாழ்க்கை கடும் கடினமானது என்பார்கள். அது விஜய்க்கு கச்சிதமாகப் பொருந்தும். திரையில் ஆவேசம் காட்டுபவர் விஜய். திரைக்குப் பின்னால், தனது வளர்ச்சியைப் பிடிக்காத சிலரால் வரும் சங்கடங்கள், ஒவ்வொரு படத்தின் மூலம் வரும் எதிர்பார்ப்புகள், அவற்றுக்கு இணையான கலாய்ப்புகள் என அனைத்தையுமே விஜய் மிகவும் அமைதியாக எதிர்க்கொள்வதுதான் அவருடைய வெற்றியின் ரகசியம்!

கா.இசக்கி முத்து, தொடர்புக்கு: esakkimuthu.k@thehindutamil.co.in

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x