

தமிழில் ரீமேக்காக இருக்கும் 'ஜாலி எல்.எல்.பி' படத்தில் பொம்மன் இரானி பாத்திரத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'கெத்து' படத்தைத் தொடர்ந்து அஹ்மத் இயக்கவிருந்த 'இதயம் முரளி' படத்தில் நடிக்க திட்டமிட்டார் உதயநிதி ஸ்டாலின். அப்படத்தில் இடைவெளிக்கு பின்பு வரும் காட்சிகள் அனைத்துமே வெளிநாட்டில் நடப்பது போன்று கதை அமைத்திருந்தார் அஹ்மத். ஆனால், பொருட்செலவைக் காரணம் கொண்டு அப்படத்தை கைவிட்டு விட்டார்கள்.
தற்போது இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜாலி எல்.எல்.பி' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி அதனை படமாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது படக்குழு.
அர்ஷத் வர்ஷி வேடத்தில் உதயநிதி நடிக்க இருக்கிறார். பொம்மன் இரானி வேடம் மிகவும் முக்கியமானது என்பதால் பிரகாஷ்ராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள். தற்போது அப்படத்தைப் பார்த்து, அவ்வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து ஒப்பந்தமாகி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது இதர படக்குழுவினரை ஒப்பந்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.