மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் இணையும் வடசென்னை
தனுஷ் - வெற்றிமாறன் மீண்டும் இணையும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தனுஷ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் படம் ஒன்றைத் தொடங்கினார்கள். அப்படத்தை தனுஷ் தயாரிக்க முன்வந்தார்.
தனுஷ், வெற்றிமாறன் இருவருமே 'காக்கா முட்டை', 'விசாரணை' ஆகிய படங்களைக் கூட்டாக தயாரித்திருக்கிறார்கள். இதில் வெற்றிமாறன் இயக்கி இருக்கும் 'விசாரணை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
'விசாரணை' பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, மீண்டும் தனுஷ் நடித்து வரும் படத்தின் பணிகளைத் துவங்கினார் இயக்குநர் வெற்றிமாறன். இப்படத்துக்கு 'சூதாடி' என்று தற்போதைக்கு தலைப்பிட்டு இருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் வெற்றிமாறன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து 'வடசென்னை' படத்தை செப்டம்பரில் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருப்பது, "வி.ஐ.பி குழுவினரின் பெயர் அறிவிக்கப்படாத படத்தைத் தொடர்ந்து, என்னுடைய அடுத்த படம் வெற்றி மாறன் இயக்கும் ‘வட சென்னை’.
இப்படத்தின் கதையை அவர் ‘பொல்லாதவன்’ சமயத்திலேயே சொல்லியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. சமந்தா கதாநாயகியாக நடிக்க உள்ளார். 2016ம் ஆண்டில் இந்தப் படம் வெளியாகும்" என்று தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே வெற்றிமாறன் - சிம்பு இணைப்பு உருவாக இருந்த படம் தான் 'வடசென்னை'. தற்போது தனுஷைக் கொண்டு அப்படத்தை வெற்றிமாறன் துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
