

‘‘ரசிகர்களோடு தன்னை இணைத்துக்கொள்ள ரொம்ப நாட்களாகவே அப்பா (ரஜினிகாந்த்) விருப்பப்பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மிக நெருக்கமான ஊடகமாக ட்விட்டர் இருப்பதால் தற்போது அதில் இணைந்துள்ளார் என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் கூறினார்.
வருகின்ற மே 9-ம் தேதி உலகமெங்கும் பல்வேறு மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கோச்சடையான்’ திரைப்படத்தோடு இணைந்து தொலைத்தொடர்பு பணிகளில் ஈடுபட ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது:
ரசிகர்களுக்கும், தனக்கும் இடையே நேரடித் தொடர்பு இருக்க வேண்டும் என்று அப்பா (ரஜினிகாந்த்) சொல்லிக்கொண்டே இருப்பார். சமூக தளங்களில் இணையும்படி பல நாட்களாகவே நிறைய பேர் அப்பாவிடம் வலியுறுத்தி வந்தனர். அது தற்போது நிறைவேறியுள்ளது. எல்லோருக்கும் இது மகிழ்ச்சி. தற்போது வெளி யாகும் ‘கோச்சடையான்’ படம் வெளியாகும் நேரத்தில் ட்விட்டரில் இணைந்திருப்பது இயல்பாக நடந்த ஒன்றுதான். ‘கோச்சடையான்’ ரிலீஸாக இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. என்னுடைய முதல் திரைப்படமான இதில் புதுமையான விஷயங்களை நிறைய கொடுத்துள்ளோம். அப்பாவின் ரசிகை, ஓர் இயக்குநர், ரஜினிகாந்தின் மகள் இப்படி எல்லாமும் சேர்ந்த மகிழ்ச்சியான, எதிர்பார்ப்புடனான ஒரு மனநிலையோடு உள்ளேன். இவ்வாறு சவுந்தர்யா ரஜினிகாந்த் பேசினார்.