

சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் வரவேற்பைப் பெற்ற 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் உரிமையில் ரஜினி நடிக்க விருப்பம் தெரிவித்ததும், பின்னர் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க அவர் முடிவு செய்ததும் புதிய சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.
மம்முட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் 'பாஸ்கர் தி ராஸ்கல்'. சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தை தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளின் ரீ-மேக்கையும் நானே இயக்கவிருப்பதாகவும், நயன்தாரா நாயகியாக நடிப்பார், நாயகர்கள் மட்டும் மாறுவார்கள் என்று இயக்குநர் சித்திக் கூறி இருந்தார்.
'லிங்கா' படத்துக்குப் பிறகு ரஜினி பல்வேறு கதைகள் கேட்டு வந்தார். ஷங்கர், லாரன்ஸ், சுந்தர்.சி என ஆரம்பித்து தற்போது ரஞ்சித் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது உறுதியாகி இருக்கிறது.
முன்னதாக, 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தைப் பார்த்த ரஜினி, அப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் தமிழ் உரிமை யாரிடம் இருக்கிறது என்று விசாரியுங்கள் என கேட்ட போது, தயாரிப்பாளர் துரைராஜிடம் இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
அப்போது துரைராஜை அழைத்து, தான் இப்படத்தில் நடிக்க விருப்பப்படுவதாக தெரிவித்திருக்கிறார். இதனால் சந்தோஷமடைந்த துரைராஜ் அதற்கான முதற்கட்ட பணிகளான அட்வான்ஸ் தொகை அளிக்கும் பணிக்கு பணம் திரட்டிக் கொண்டிருந்திருக்கிறார். அதற்குள் தாணு - ரஞ்சித் படம் உறுதியாகி விட்டது.
தனக்கு கிடைக்க வேண்டிய ரஜினியின் தேதிகள் பறிபோய் விட்டதால் துரைராஜ் - தாணு இருவருக்குள்ளும் மனக்கசப்புகள் வந்து, தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒரு வாரத்தில் சுமூகமாக முடிய இருப்பதாக அக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் தெரிவித்தார்கள்.
இதனால் ரஞ்சித் படத்தை முடித்தவுடன் 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தில் ரஜினி நடிக்கக் கூடும் என்றும், இதுகுறித்து முறையான அறிவிப்பு இன்னும் ஒரிரு வாரங்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.