

அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களைத் தந்த பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
'லிங்கா' பட அனுபவத்தால் மீண்டும் ஓர் உடனடி ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினி. இதனால் ஷங்கர் - ரஜினி கூட்டணி மீண்டும் சேர வாய்ப்பு அதிகம் என்றது கோலிவுட்.
ரஜினியும் தனது அடுத்த படம் கண்டிப்பாக ஹிட்டாக வேண்டும் என்று பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார். ஷங்கர் கூறிய 'எந்திரன் 2', ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி என பலரும் ரஜினியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த இயக்குநர்கள் பட்டியலில் இயக்குநர் ரஞ்சித்தின் பெயரும் சேர்ந்துள்ளது மட்டுமன்றி, அவர் கூறிய கதையில் நடிக்க உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டார் ரஜினி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இப்படத்தை தாணு தயாரிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. இச்செய்தி குறித்து தாணுவிடம் கேட்டபோது, "இதில் உண்மையில்லை" என்று தெரிவித்தார்.
இது குறித்து ரஜினி தரப்பில் விசாரித்த போது, "இயக்குநர் ரஞ்சித் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளம் இயக்குநர்கள் எனக்கான கதை எதுவும் வைத்திருப்பார்களா என்று ரஜினி விசாரித்தது உண்மைதான். 'லிங்கா' படத்துக்குப் பிறகு நிறைய இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டு விட்டார். ஆனால், எந்தப் படத்தை உறுதி செய்கிறார் என்பது அவருடைய முடிவில்தான் இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் ரஜினியை சந்தித்து ஒரு வரிக் கதையை கூறியது உண்மை. அக்கதையைக் கேட்டவுடன் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்து, முழுவடிவம் கேட்டிருக்கிறார் ரஜினி" என்றார்கள்.
'எந்திரன் 2'-க்காக நடைபெற்ற கதை விவாதங்கள்
'ஐ' படத்தின் படப்பிடிப்பு தாமதமானபோது விஜய் - விக்ரம் இருவரையும் மனதில் வைத்து கதை ஒன்றை எழுதினார் ஷங்கர். 'லிங்கா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையலாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கதையை ரஜினிக்காக மாற்றினார்.
தற்போது, ரஜினி நடிக்கவிருப்பதால் பட்ஜெட்டும் அதிகமாகி இருக்கிறது. நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் நீங்கலாக படப்பிடிப்புக்கு மட்டுமே ரூ.190 கோடி பட்ஜெட். இதற்கு, லைக்கா நிறுவனம் சம்மதம் தெரிவித்துவிட்டது.
விஜய்யை மனதில் வைத்து எழுதிய கதையில் நாயகனாக ரஜினி இடம்பெற்றுவிட்டதால், வில்லன் வேடம் யார் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.
நாயகனுக்கு இணையான வில்லன் வேடம் என்பதால் பெரிய நடிகர்கள் யாராவது நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷங்கர். விஜய் - விக்ரம் இருவருக்கும் எழுதிய கதை என்பதால், தற்போது ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார்.
தற்போது விக்ரம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், சென்னை திரும்பிய உடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு தொடர்ச்சியாக நிறைய இயக்குநர்களிடம் கதையைக் கேட்டு, தற்போது இயக்குநர் ரஞ்சித் கதையை உறுதி செய்திருக்கிறார் ரஜினி. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. | தொடர்புடைய செய்திக் கட்டுரை:>ரஜினி - ரஞ்சித் கூட்டணி உருவான விதம்!