

இப்போதுள்ள நடிகர்கள் எம்.ஜி.ஆரை பின்பற்ற வேண்டும் என்று 'யான்' பத்திரிகையாளர் சந்திப்பில் கவிஞர் தாமரை தெரிவித்தார்.
ஜீவா, துளசி, நாசர் உள்ளிட்ட பலர் நடித்துவரும் 'யான்' படத்தினை இயக்கி வருகிறார் ரவி கே.சந்திரன். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மண்ட் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீடு முடிந்து, பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஜீவா, துளசி, இயக்குநர் ரவி கே.சந்திரன், பாடலாசிரியர் தாமரை மற்றும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
இச்சந்திப்பில் கேள்வி நேரத்தில் ஜீவாவிடம் "உங்களது படங்களில் டாஸ்மாக் காட்சிகள் நிறைய இருக்கிறது, டாஸ்மாக் வியாபாரமும் 25000 கோடியைத் தொட்டுவிட்டது என்கிறார்கள், உங்கள் படங்களில் அப்படிப்பட்ட காட்சிகளை குறைக்கலாமே" என்றார்கள். அதற்கு ஜீவா "அதை நீங்கள் இயக்குநர் ராஜேஷிடம் கேட்க வேண்டும். நான், எங்க போனாலும் ‘மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லுன்னு…’ சொல்றாங்க. கல்யாண வீட்டுக்குப் போனாலும் சரி, சாவு வீட்டுக்குப் போனாலும் சரி…அந்த படமும் வசனமும் அவ்வளவு ரீச்சாகிடுச்சி. நான் என்னங்க பண்றது?" என்றார்.
உடனே "அப்ப உங்களுக்குலாம் சமூகப் பொறுப்பே இல்லையா" என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். அப்போது மைக் வாங்கி பேசிய பாடலாசிரியர் தாமரை "இப்போது வெளிவரும் படங்களில் பெரும்பாலான காட்சிகளை டாஸ்மாக்கை மையமாக வைத்துதான் எடுக்கிறார்கள். மது அருந்திக் கொண்டேதான் வசனம் பேசுகிறார்கள். மது அருந்திக் கொண்டுதான் பாட்டு பாடுகிறார்கள். இது படம் பார்க்கிற இளைஞர்களின் மனதை பாதிக்கும்.
இந்த விஷயத்தில், இப்போதுள்ள நடிகர்கள் எம்ஜிஆரை பின்பற்ற வேண்டும். அவர் ஒரு படத்தில் கூட புகை பிடிக்க மாட்டார், மது அருந்த மாட்டார். அதனால் அவரைப்போலவே இன்றைய நடிகர்களுககும் சமுதாயத்தின் மீது அக்கறையும், பொறுப்பும் இருக்க வேண்டும். அதேபோல் டைரக்டர்களும் சமுதாய நலன் கருதி கதை மற்றும் காட்சிகளை அமைக்க வேண்டும்" என்று கூறினார்.