உத்தம வில்லனுக்கு சரத்குமார் உறுதுணை: விஷால் - ராதிகா பரஸ்பரம் நெகிழ்ச்சி

உத்தம வில்லனுக்கு சரத்குமார் உறுதுணை: விஷால் - ராதிகா பரஸ்பரம் நெகிழ்ச்சி
Updated on
1 min read

'உத்தம வில்லன்' பிரச்சினைக்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்று தீர்த்து வைத்த சரத்குமாருக்கு நடிகர் விஷால் நன்றி தெரிவித்தார்.

'உத்தம வில்லன்' வெளியாகும் சமயத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சினைகளைப் பேசி தீர்த்துவைத்து, படம் வெளியாக காரணமாக இருந்தவர் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார். தொடர்ச்சியாக 27 மணி நேரம் 'உத்தம வில்லன்' பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது தொடர்பாக சரத்குமார், விஷால் இருவருக்குமே தொடர்ச்சியாக பனிப்போர் நிலவி வருகிறது.

இந்நிலையில், 'உத்தம வில்லன்' விவகாரத்தில் சரத்குமாரின் முயற்சிகளுக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார். முதலில் " இறுதியாக 'உத்தம வில்லன்' தமிழ்நாட்டில் வெளியாகிவிட்டது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அதற்கு ராதிகா சரத்குமார், "அதற்கு நீங்கள் சரத்குமார் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும் விஷால்" என்று கூற, "இப்பிரச்சினையில் முன்னின்ற சரத் சார், பைனான்சியர்கள், தயாரிப்பாளர் சங்கம், விக்ரமன், அன்பு, சூர்யா, ஞானவேல் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்தார்.

"நடிகர் சங்கத் தலைவரை முதல் ஆளாக வாழ்த்தியதற்கு நன்றி" என்று ராதிகா கூற, "ஒரு பிரச்சினைக்கான தீர்வை அளிக்கும்போது சாரை பாராட்டும் முதல் ஆளாக நான் இருப்பேன்!" என்று விஷால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in