Published : 29 May 2015 07:18 PM
Last Updated : 29 May 2015 07:18 PM

மாசு: முதல் நாள் முதல் பார்வை

காமெடி பேய் படங்கள்தான் இப்போதைய டிரெண்ட் போல. ஹாரர் படங்களின் தொடர் வரிசையில் இப்போது சூர்யாவின் 'மாசு'.

'மாஸ்' என்னும் படத் தலைப்பை 'மாசு என்னும் மாசிலாமணி'யாக கடைசி நேரத்தில் மாற்றியிருக்கிறார்கள். மாசு மாஸாக இருக்கிறதா?

ஒரு விபத்தில் சூர்யாவுக்கு ஆவிகளைக் காண முடிகிற சக்தி கிடைக்கிறது. அதற்குப் பிறகு, ஒரு வீட்டில் இன்னொரு சூர்யாவை ஆவி (அ)ரூபத்தில் சந்திக்கிறார். அவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு, சமுத்திரக்கனியை, ஏன் சூர்யா ஆவி, பழிவாங்கத் துடிக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

வழக்கம்போல வெங்கட் பிரபு கூட்டணி இந்தப் படத்திலும் சேர்ந்துவிட்டது. பிரேம்ஜி அமரன் படம் முழுக்க சூர்யாவின் நண்பனாக வந்து சிரிக்க வைக்கிறார். தவறாமல் ஜெய், அரவிந்த் ஆகாஷ் இருவரும் படத்தில் ஆஜராகி இருக்கிறார்கள்.

திரையில் சூர்யாவைக் கண்டதும் ரசிகர்களின் விசில் சத்தம் காதைப் பிளந்தது. ஆனால், நயன் தரிசனம் தரும்போது எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

படத்தின் மேக்கப்பில் அடக்கியே வாசித்திருக்கிறார் நயன். வழக்கம்போல இந்தப் படத்திலும் புது மாடல் சுடிதாரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். பின்னிருக்கைகளில் அமர்ந்திருந்த பெண்கள், "அட டிசைன் நல்லாருக்கே!" என்று பேசியதைக் கேட்க முடிந்தது (அது சரி!).

படத்தில் நயன்தாராவுக்கு நடிக்க ஸ்கோப்பே இல்லை. சூர்யா- நயன் இடையிலான காதல் காட்சிகள் அத்தனை வலுவாக இல்லை. படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரியே இல்லை. ஏன், 'கெ'கூட இல்லை. சூர்யா ஏன் அவரைக் காதலிக்கிறார் என்பது 'மிஸ்டரி'யாகவே இருந்தது.

கொஞ்ச நேரமே வந்து போகிறார் ப்ரணிதா . கூடவே வரும் அந்தக் குட்டி தேவதை செம துறுதுறு.

பருப்பில்லாமல் கல்யாணமா.. சரக்கில்லாமல் பிரேம்ஜி காமெடியா? சூர்யா, நயனிடம் காதலைச் சொல்லி பரிசு கொடுக்கும்போது அவர் வாங்காமல் போக, "வா மச்சான், சோகத்துல சரக்கடிக்கலாம்!'' எனும்போதும், திரும்ப வந்து நயன், அந்தப் பரிசை வாங்கிச் சென்றவுடன், "வா மச்சான், சந்தோஷமா இருக்கு. தண்ணி அடிக்கலாம்!" எனும்போதும் தியேட்டரில் கைத்தட்டல் சத்தமும், விசில் சத்தமும் பறந்தது. ஆனாலும் இன்னும் எவ்வளவு படத்துல பாஸ் இப்படியே நடிப்பீங்க? சரக்கை மாத்தி நடிக்கலாமே!

"யாரு பெஸ்ட்டா கொடுக்கறாங்க அப்படிங்கறதவிட, யாரு ஃபர்ஸ்டா கொடுக்கறாங்க அப்படிங்கறதுதான் முக்கியம்" இது படத்தில் பார்த்திபன் அடிக்கடி சொல்லும் டயலாக். அவருடைய வழக்கமான கேலியும் கிண்டலும் இதிலும் ப்ரசன்ட் சார்.

வழக்கமான வெங்கட்பிரபு படங்களில் இருக்கும் 'நெளி'வுசுளிவுகள் இந்தப் படத்தில் இல்லை. பேய்கள் எல்லாம் நல்ல பேய்களாகவே இருப்பதால் தைரியமாக குடும்பத்தோடு குழந்தைகளையும் அழைத்துச் சென்று படத்தைப் பார்க்கலாம்.

பிரம்மானந்தம் வீட்டில் சூர்யா மற்றும் பேய்க் குழுவினர், அதகளம் செய்யும் காட்சி சிரி தெறி மாஸ்!

பேய்கள் எதுவும் கோவிலுக்குள் வர முடியாது என்பதைக் கூறிய வெங்கட் பிரபு, எப்படி பிரேம்ஜியை மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதித்தார்?

பேய்க்கு என்ன தேவை இருக்கமுடியும்; பேய்க்கு என்ன ஆசை? சூர்யாவைவிட பிரேம்ஜிதான் பாங்காக் போகணும், ஃபாரின்ல என்ஜாய் பண்ணனும், பணம் சம்பாதிக்கணும் என்று அதிகம் ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற லாஜிக் ஓட்டைகளை மறந்துவிட வேண்டும்.

வழக்கமான வெங்கட்பிரபு படம் போல இதிலும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். சர்ப்ரைஸ் பேக்கேஜாக பார்த்திபன், கருணாஸ், ஸ்ரீமன், ஜெயப்பிரகாஷ், மனோபாலா, சண்முக சுந்தரம், சரத் ரோஹித்வா , பிரம்மானந்தம் எனப் பட்டியல் நீ..ண்டு கொண்டே செல்கிறது.

குறைந்த நேரமே வந்தாலும், நன்றாக நடித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

ஆவி சூர்யாவுக்கும், நிஜ சூர்யாவுக்கும் இடையிலான காட்சிகள் அருமை.

கதையமைப்பில் முனி-2 அதாவது காஞ்சனா படத்தை, மாஸ் நினைவுபடுத்துகிறது. அங்கே ஒரே ஒரு பேய், லாரன்ஸிடம் உதவி கேட்கும். இங்கே பேய்கள் கூட்டமாய் வந்து சூர்யாவிடம் உதவி கேட்கின்றன. இரண்டு படங்களிலுமே நிலப்பிரச்சனைதான்.

ஒரு ஹாலிவுட் படத்தின் சாயல் இதில் இருந்தாலும், எடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் ரசிகர்களை வசப்படுத்த முயன்றிருக்கிறார் வெங்கட்பிரபு.

யுவன் இசையில் பாடல்கள் பெரிதாய் சொல்லிக்கொள்ளும்படி இல்லை; சுமார் ரகம்தான்.

வழக்கமான பழிவாங்கல் கதையாக இருந்தாலும், பேய்களின் துணையோடு எப்படி வில்லன்களை வீழ்த்துகிறார் என்பதை ஒவ்வொரு காட்சியாக முடிச்சுகளை அவிழ்த்த விதத்தில் மாஸ் படத்தை தைரியமாகப் பார்க்கலாம்.

படம் எப்படிங்க? என்று கேட்டதற்கு ஒரு ரசிகர் ’சிங்கம் காஞ்சனாவோடு சேர்ந்து மங்காத்தா விளையாடி இருக்கிறது’ என்றார். லாஜிக் பார்க்க மாட்டீர்கள் என்றால் மாஸு படத்தை பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x