36 வயதினிலே: முதல் நாள் முதல் பார்வை

36 வயதினிலே: முதல் நாள் முதல் பார்வை
Updated on
2 min read

ஜோதிகாவின் மறுவருகை என்ற ஒற்றை காரணம் போதாதா '36 வயதினிலே' படத்தைப் பார்க்க?

'மொழி‘ படத்தில் சைகைகளால் அபிநயம் பிடித்த ஜோதிகா 8 வருடங்களுக்குப் பிறகு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். ஜோதிகாவின் வரவேற்பை ஆமோதிப்பதைப் போல தியேட்டரில் குவிந்திருந்தது பெண்கள் கூட்டம்.

'36 வயதினிலே' திரைப்படம் அந்த அளவுக்கு ரசிகர்களை வசப்படுத்தியதா?

வருவாய்த் துறையில் வேலை செய்கிறார் வசந்தி தமிழ்ச்செல்வன் (ஜோதிகா). தமிழ்ச்செல்வன் (ரஹ்மான்) வானொலி அறிவிப்பாளர்.

ரஹ்மானுக்கு அயர்லாந்து செல்ல விருப்பம். அந்த விருப்பத்துக்கு வரும் சில தடைகளால் மனைவி ஜோதிகாவைத் திட்டித் தீர்க்கிறார். கண்ணை மூடித் தூங்கினா எல்லாருக்கும் கனவு வரும். அது இல்லை. வாழ்க்கையில சில உணர்வுகளால விஷனா பார்க்கிற கனவு என்று மனைவியிடம் கோபமுகம் காட்டுகிறார். அதற்குப் பிறகு கணவனாலும் சமூகத்தாலும் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜோதிகா எப்படி சாதிக்கிறார்?

8 வருடங்களுக்குப் பிறகு நடிக்க வந்தாலும் 'பேக் டு தி ஃபார்ம்' ஆகி இருக்கிறார் ஜோதிகா. சூர்யா பெயரை டைட்டிலில் போடும்போது எழும் விசில் சத்தத்தைக் காட்டிலும், ஜோ-வை திரையில் பார்க்கும்போது சத்தம் அதிகம் எழுகிறது. ஜோதிகாவின் ஒவ்வொரு ரியாக்‌ஷனுக்கும் பெண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது அதிசயம்தான்.

டிராஃபிக்கில் சிக்கி ஆபிஸூக்கு லேட்டாக வந்து திட்டு வாங்குவது, தங்கப்பன் பெயரை தங்கப்பெண் என எழுதியதால் டோஸ் வாங்குவது, கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி கூனி குறுகுவது, கிண்டல் செய்பவர்கள் மூக்கை உடைக்க பொறாமையை பொங்க வைக்கும் அளவுக்கு பில்டப் கொடுப்பது, பஸ்ஸில் பயணிக்கும் பாட்டியின் சீட்டை பிடிப்பது, சீட் வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இடித்துவிட்டு பரவாயில்லை என சொல்வது, அயன்பாக்ஸ்ல மூஞ்சியை தேய்க்கிறேன் வா என் பொண்ணா நீ என மகளிடம் கோபப்படுவது என கிடைத்த எல்லா இடங்களிலும் அளவாக ஸ்கோர் செய்கிறார் ஜோதிகா.

ஜோதிகாவின் ஃபெர்பாமன்ஸ் ஆஹா என்று சொல்லவைக்கவில்லை. ஆனால், அவ்வளவு பொருத்தமாக அடக்கமாக இருக்கிறது.

ஜோதிகாவின் கணவராக ரஹ்மானின் நடிப்பு ஓ.கே ரகம். ஆனால் கனவு, வாழ்க்கை, லட்சியம் என்று மூச்சு முட்ட பேசுபவர் வார்த்தைகளில் மட்டு மாடுலேஷன் காட்டுறார். அதை உணர்வாக, நடிப்பாக தரவில்லை என்பதுதான் வருத்தம். எனக்குத் தெரியாதுங்கிற ஒரே ஒரு வார்த்தையை வைச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்றது இந்த உலகத்துலயே நீ ஒருத்திதான் என ரஹ்மான் ஆதங்கப்படும்போது மட்டும் கவனிக்க வைக்கிறார்.

ஜோதிகாவின் தோழியாக அபிராமி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அபிராமியின் எனர்ஜி பேச்சுக்கு ரசிகர்கள் கிளாப்ஸ் அடித்தனர்.

டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், பயில்வான் ரங்கநாதன், பிரேம், தேவதர்ஷினி ஆகியோர் சரியான தேர்வு.

திவாகரனின் ஒளிப்பதிவும், சந்தோஷ் நாராயணனி இசையும் படத்துக்குப் பெரும் பலம்.

மலையாளத்தில் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் தமிழில் மறு ஆக்கம் செய்திருப்பது படத்தை எந்த விதத்திலும் சிதைக்காமல் பார்த்துக்கொள்கிறது.

மலையாளத்தில் மஞ்சுவாரியருக்கு அம்மா இருப்பதைப் போலவும், அம்மாவின் கிராமத்துக்குச் சென்று ரிலாக்ஸ் ஆகிவருவதைப் போலவும் காட்சிகள் இருக்கும். தமிழில் ஜோதிகாவுக்கு அப்படிப்பட்ட காட்சிகள் இல்லை.

ஒரு பெண்ணின் கனவுக்கு எக்ஸ்பைரி தேதியை நிர்ணயிப்பது யார்? ஏன்? இதுதான் படத்தின் ஒட்டுமொத்த கேள்வி.

எந்த வயதிலும் சாதிக்க முடியும். அதற்கு வயது தடையல்ல என்று சொன்னதற்காகவும், இயற்கை விவசாயம் என்பதை வலியுறுத்தியதற்காகவும் '36 வயதினிலே' படத்தை வரவேற்கலாம்.

தமிழில் இப்படிப்பட்ட படங்கள் ரீமேக் மூலமாகவாவது வருவது ஆரோக்கியமான விஷயம். முதல் நாள் வரவேற்பு நீடித்தால், தமிழ் சினிமாவில் இந்த சாதகப் போக்கு முழு பலன் தரலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in