

ஒரு பாடலுக்கு நடனமாட 8 லட்சம் வாங்கி வருவதாக 'நாரதன்' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.
நகுல், நிகிஷா படேல், பிரேம்ஜி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'நாரதன்'. நாகா வெங்கடேஷ் இயக்கி இருக்கும் இப்படத்துக்கு மணிசர்மா இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அவ்விழாவில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியது, "'நாரதன் படத்தில் நடித்ததுக்கு முழுக்க இயக்குநர் நாகா வெங்கடேஷ் தான் காரணம். இந்தப் படத்தில் நடிப்பதற்காக என்னை பார்க்க வேண்டும் என்று ஒரு ஹோட்டலுக்கு அழைத்தார்கள். ஏன் ஹோட்டலுக்கு என்றேன். சாப்பிட்டுக் கொண்டே பேசிவிடலாம் என்றார்கள். "இல்லை சார்.. ஹோட்டலில் நான் சாப்பிட முடியாது. என்னுடைய ரசிகர்கள் நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். நாம் வெளியே மீட் பண்ணலாம்" என்றேன்.
எல்லாம் பேசிவிட்டு இவ்வளவு நாள் நடிக்க வேண்டும் என்று ஒரு சம்பளம் சொன்னார்கள். எனக்கு ஒத்துவராது சார், நான் ஒரு பாடலுக்கே 8 லட்ச ரூபாய் வாங்குகிறேன் என்றேன். என்னது 8 லட்சமா என்றார். 'சும்மா நச்சுனு இருக்கு' இசை வெளியீட்டு விழாவில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று 8 லட்சம் கொடுத்தார்கள். நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று பார்த்தேன். 8 லட்சம் தானா என்று கேட்டேன். "சில்க் ஸ்மிதாவுக்கே 8 லட்சம் கிடையாது தெரியுமா" என்றவரிடம், இன்னொரு ஒரு 2 லட்சம் கொடுங்கள் சார். என்னுடைய டிரைவர் உடன் இருப்பவர்களுக்கு என்றேன். அய்யோ 8 லட்சம் போதும் என்றார்கள்.
நட்புக்காக இந்தப் படத்தில் நடித்தேன். இயக்குநர் நாகா வெங்கடேஷ் என்னுடைய ரசிகர். படப்பிடிப்பு தளத்தில் என்னைப் பார்த்தவுடன் சிரித்துவிடுவார். எதற்கு சிரித்தார் என்று எனக்கு தெரியாது. காசு கொடுத்து நம்மை வரவைத்து சிரிக்கிறார், சிரித்துவிட்டு போகட்டும் என்று விட்டுவிட்டேன். ஹீரோயினுடன் ஒரு பாடல் கொடுங்கள் என்று இயக்குநர்களிடம் கேட்பேன். இல்லை உங்களுக்கு காட்சிகள் தான் என்பார்கள். 'யா யா' படத்தில் எனக்கு 11 கெட்டப் கொடுத்தார்கள். வரக்கூடிய படங்களில் எனக்கு பாடல் தான் எதிர்பாக்கிறேன். ஏனென்றால் பாடலைத் தான் என்னுடைய ரசிகர்கள் விரும்புகிறார்கள். 'சுட்டபழம்' படத்தில் நானே பாடி ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறேன். அதை பார்த்தீர்கள் என்றால் மெய்சிலிர்த்து விடுவீர்கள்.
கூட பிறந்தவர்களால் என்றைக்குமே நமக்கு ஆபத்து தான். என்றைக்காவது ஆப்பு வைத்துவிடுவார்கள். நட்பு அடிப்படையில் இருக்கும் சகோதர்கள் தான் கடைசி வரைக்கும் உடன் வருவார்கள். நான் நிறையப் பேரை நம்பி நம்பி ஏமாந்துவிட்டேன். எல்லாருமே நான் ஏமாத்தினேன் என்கிறார்கள், உண்மையில் நான் யாரையும் ஏமாத்தவில்லை.
என்னுடைய உயிர், மூச்சுக்காற்று எல்லாமே கலைத்துறை தான். என்னென்னமோ பண்ணிட்டு இருந்தேன். எல்லாமே வீணாகிவிட்டது. இன்றைக்கு என்னை கலைத்துறை தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது." என்று பவர் ஸ்டார் சீனிவாசன் பேசினார்.