ரகசிய திருமணமா?- நயன்தாரா - விக்னேஷ் சிவன் மறுப்பு

ரகசிய திருமணமா?- நயன்தாரா - விக்னேஷ் சிவன் மறுப்பு
Updated on
1 min read

எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்று நடிகை நயன்தாராவும் இளம் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கூட்டாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் 'நானும் ரவுடிதான்' படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்தில் தனுஷ் தயாரித்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவருமே காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், கொச்சியில் உள்ள சர்ச்சில் இருவரும் ரகசியம் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சமூக வலைத்தளத்தில் அனைவருமே பகிர்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில், திருமணச் செய்தி குறித்து நயன்தாரா கூறும்போது, "திருமணம் நடந்ததாக வெளியான தகவலில் துளி கூட உண்மையில்லை. எனது வாழ்க்கையில் தற்போதைய நிலையில் நடக்கும் ஒரு விஷயம் சினிமாவில் நடிப்பது தான். தேவையில்லாத இல்லாத செய்திகளை உருவாக்கி பரப்பும் பத்திரிகைகள் கொஞ்சம் தங்களது வேலைகளை சரியாக பார்க்க வேண்டும்.

திருமணம் என்பது எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும், அது வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு. அது எனது வாழ்வில் நடக்கும்போது அதனை எல்லோருக்கும் தெரிவிப்பேன். மறைமுகமாக எனது திருமணம் நடக்காது" என்று தெரிவித்துள்ளார்.

திருமண செய்தி குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, "திருமணம் நடந்ததாக வெளியான செய்தி பைத்தியக்காரத்தனமானது. அதில் எதுவும் உண்மை இல்லை. இதுபோன்ற செய்திகள் என்னை தனிப்பட்ட முறையிலும் தொழில் முறையிலும் மிகவும் பாதிக்க செய்கிறது. பத்திரிகைகள் கொஞ்சம் நிலையாக செயல்பட வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

இருவருமே திருமண செய்தியை மறுத்திருக்கும் நிலையில், காதலித்து வருவதாக வெளியாகி இருக்கும் செய்திக்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in