

அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ஷாம் உள்ளிட்ட பலர் நடிக்க ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஒரு மெல்லிய கோடு'. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே வீரப்பன் கதையைப் பின்னணியாகக் கொண்டு 'வனயுத்தம்' படத்தை இயக்கினார் ஏ.எம்.ஆர் ரமேஷ்.
சுனந்தா புஷ்கர் மரணத்தை பின்னணியாக கொண்டு தான் 'ஒரு மெல்லிய கோடு' படம் உருவாகிறதா என்று குஷ்பு இயக்குநர் ரமேஷிடம் விசாரித்ததாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து இயக்குநர் ரமேஷிடம் பேசினோம். "குஷ்புவிடம் ஏன் எனது படத்தின் கதை கூற வேண்டும். படத்தின் கதைப்படி மனிஷா கொய்ராலா இறந்துவிடுவார். அதற்கு பிறகு நடந்துவரும் விசாரணைகளை மையப்படுத்தி இருக்கும். படம் வெளியாகும் போது மக்கள் எதைப்பற்றிய படம் என்று தெரிந்து கொள்வார்கள்" என்று இயக்குநர் ரமேஷ் தெரிவித்தார்.
இதற்கு குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிலளித்திருக்கிறார். "மறைந்த சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கரைப் பற்றிய படத்தில் நான் நடிப்பது பற்றி வரும் செய்திகள் பற்றி ஒன்றும் புரியவில்லை
அர்ஜூனின் மனைவியாக ஒரு படத்தில் நடிக்க என்னை சிலர் அணுகினர். நான் கதை கேட்காமல் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்பதால் கதையைக் கேட்டேன். இதில் புதிதாக இந்த சுனந்தா புஷ்கர் விஷயம் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.
ஒரு காங்கிரஸ் உறுப்பினராக, இந்தப் படம் சுனந்த புஷகரைப் பற்றியதா என நான் விசாரித்ததாகக் கூறும் இந்த புது கோணம் ஏன் என்று தெரியவில்லை. நான் ஏன் அவ்வாறு விசாரிக்க வேண்டும்?
தனிப்பட்ட முறையில் நடிகர் அர்ஜுனை அழைத்துப் பேசினேன். படத்தில் நடிப்பதை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. கவுரவ வேடங்களில் தோன்றுவதிலும் எனக்கு ஆர்வம் இல்லை என்று கூறினேன்.
வேலையின்றி இருப்பவர்கள் புதிதாக சில தேவையில்லாத கதைகளை உருவாக்குகிறார்கள் என்று தோன்றுகிறது. அந்தப் படத்தைப் பற்றியோ, இயக்குநரைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது" என்று குஷ்பு காட்டமாக தெரிவித்திருக்கிறார்.