

‘காஞ்சனா 2’ படத்தின் ரிலீஸ் பரபரப்பில் சுற்றி வருகிறார், ராகவா லாரன்ஸ். படத்தை வெளியிடுவதற்கான இறுதிகட்ட பணிகளில் தீவிரமாக இருந்த அவரைச் சந்தித்தோம்.
‘தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் படத்தைத் தயாரிப்பதால் கதாபாத்திரத் தேர்வு தொடங்கி படத்தின் இறுதிகட்ட ஒளிக் கலவை வரை ஒவ்வொரு நிமிடமும் நான் உடன் இருக்க வேண்டி இருந்தது. அதனால் கடந்த 2 ஆண்டுகளில் பெரும்பாலான இரவுகள், எனக்கு பகல்களாகவே அமைந்தன. இருப்பினும் படம் சிறப்பாக வந்திருப்பது என் களைப்பை போக்கியுள்ளது” என்று உற்சாகமாக பேசத் தொடங்கினார் ராகவா லாரன்ஸ்.
‘காஞ்சனா’ முதல் பாகத்தின் பிரதிபலிப்பு இல்லாமல் இருக்க இந்தப்படத்தில் புதிதாக என்ன செய்திருக்கிறீர்கள்?
‘காஞ்சனா’ படத்தின் பிரதிபலிப்பு இந்தப் படத்தில் இருக்காது. அந்தப் படத்தை விட இதில் பயத்தையும் காமெடியையும் அதிகமாகவே கொடுத்திருக்கிறோம். ஒரு திரில்லர் படத்தை புதிய வழியில் சொல்ல முயற்சி செய்துள்ளோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஒரு திகில் படத்தை இசை சார்ந்த படமாகவும் கொடுக்கலாம் என்ற முயற்சியில் சில மென்மையான பாடல்களையும் இப்படத்தில் சேர்த்திருக்கிறோம். அதனால் இதை வெறும் பேய்ப் படமாக மட்டுமின்றி ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாகவும் மக்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இந்தப் படத்துக்கு தாப்ஸி எப்படி பொருந்தியிருக்கிறார்?
இந்தப் படத்தின் நாயகி கதாபாத்திரத்துக்கு ஆங்கிலப் பட நாயகியைப் போன்ற ஒருவர் தேவைப்பட்டார். அதற்கு தாப்ஸி மிகவும் பொருத்தமாக இருந்தார். அதோடு ஒரு திகில் படத்தில் வெளிப்படுத்த வேண்டிய நடிப்பையும் அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
இப்படத்தில் நித்யாமேனன் நடிப்பதைப் பற்றி நீங்கள் வாயே திறக்கவில்லையே?
அவருக்கும் படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அவருடைய கதாபாத்திரத்தைப் பற்றி முன்பே சொல்லிவிட்டால் சஸ்பென்ஸ் போய்விடும். அதேபோல நானும் இப்படத்தில் பாட்டி கதாபாத்திரம் உட்பட சில வித்தியாசமான கதாபாத்திரங்களில் வருகிறேன். படம் வெளியான பிறகுதான் அதைப்பற்றியெல்லாம் பேச முடியும்.
நீங்கள் உங்கள் அம்மாவுக்கு கோயில் கட்டி இருக்கிறீர்களே. அம்மா மீது உங்களுக்கு அத்தனை பாசமா?
பிறந்தோம், வாழ்ந்தோம் என்று வாழ்க்கையை முடித்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த உலகத்தில் பெற்ற தாயின் மீது அன்பு செலுத்துவது சமீப கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது. தாய்மையை நாம் மறந்தே விட்டோம் என்றும் சொல்லலாம். நான் எப்போதும் அம்மாவின் ஆசிர்வாதத்தோடுதான் எந்த வேலையையும் தொடங்குகிறேன். தாய்தான் எனக்கு கடவுள்.
தெலுங்கில் முன்னணி நாயகர்களை வைத்து படம் இயக்கும் நீங்கள் தமிழில் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்காதது ஏன்?
இப்போது அந்த வேலைதான் நடந்து வருகிறது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.
நீங்கள் படிக்க வைக்கும் ஆதரவற்ற குழந் தைகள் நடிப்பு, நடனம் போன்றவற்றின் மீது ஆர்வம் செலுத்துகிறார்களா? அவர்களுக்கு இத்துறையில் ஏதாவது பயிற்சி அளிக்கிறீர்களா?
அவர்கள் இப்போது சின்னக் குழந்தைகள்தானே. அவர்களில் சிலர் இப்போது ஓவியம், விளையாட்டு ஆகியவற்றில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். நடனம் மற்றும் நடிப்பு மீது அவர்கள் ஆர்வம் காட்டும்போது அதில் அவர்களுக்கு பயிற்சியளிப்பேன்.