

தமிழில் தொடர்ச்சியாக படங்கள் தயாரித்து வந்த சி.வி.குமார் இந்தாண்டு இறுதிக்குள் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அனைத்து திரையுலகில் படங்களைத் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார். அவருடைய திட்டங்கள் தான் என்ன என்று அவருடன் உரையாடியதில் இருந்து..
நிறைய படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் வெளியாகாமல் இருக்கிறது. நீங்கள் தயாரிக்கும் படத்துக்கு மட்டும் திரையரங்குகள் கிடைக்கிறதே எப்படி?
நான் திரையுலகுக்கு வந்த சமயத்தில் இப்பிரச்சினை இல்லை. என்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு என்று ஒரு மதிப்பு வந்திருக்கிறது. அதனால் தான் எனது படங்களுக்கு இப்பிரச்சினை வருவதில்லை. தற்போது நான் திரையுலகுக்கு வந்திருந்தால், எனக்கு இப்பிரச்சினை வந்திருக்கும். தமிழ் சினிமா தற்போது மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை. திரையரங்குக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது, படத்துக்கு லாபம் என்பதே இல்லை.
இந்த வருடத்தின் இறுதிக்குள் தயாரிப்பே குறைந்துவிடும் என்று நம்புகிறேன். தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்தால் நிறையப் பேர் இந்த துறையில் இருக்க மாட்டார்கள். நாங்களுமே இந்த வருடத்தின் இறுதியில் படத்தயாரிப்பை குறைத்து கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம்.
உங்களது நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேசிய விருதுகள் கிடைப்பதில்லையே..
தேசிய விருதுக்கு என்ன வரைமுறைகள் வைத்திருக்கிறார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. இந்தியன் பனோரமா, தேசிய விருதுகள் எல்லாம் என்ன அடிப்படையில் கொடுக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியவில்லை. 10 பேர் உட்கார்ந்து படம் பார்க்கிறார்கள் இல்லையா, அவர்களுக்கு மட்டும் படம் பிடித்தால் மட்டும் போதும் என்றே நினைக்கிறேன். 10 பேருக்கு படம் பிடிக்கவில்லை என்றால் தேசிய விருது இல்லை. பிடித்தால் தேசிய விருது அவ்வளவு தான்.
எனக்கு விருதுகள் மேல் எல்லாம் நம்பிக்கையில்லை. சினிமா என்பது ஒரு வியாபாரம். எனக்கு தெரிந்த பாதையில் நான் பயணித்துக் கொண்டே இருக்கிறேன். ஆத்ம திருப்திக்காக நல்ல படங்கள் மட்டுமே பண்றேன். அந்த படங்கள் எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது, மக்களும் ரசிக்கிறார்கள், லாபமும் கிடைக்கிறது அவ்வளவு தான்.
எதற்காக கூட்டு முயற்சியில் மட்டுமே படம் தயாரிக்கிறீர்கள். தனியாக படம் தயாரித்தால் என்ன?
நான் தனியாக தான் தயாரிக்கிறேன். என் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து வாங்கி கொள்கிறார்கள் அவ்வளவு தான். எனக்கு நல்ல கதை எது என்று தேர்ந்தெடுக்க தெரியும், தயாரிக்க தெரியும் அவ்வளவு தான். வியாபாரத்தில் எனக்கு அறிவு கிடையாது. ஆகையால், அதை தெரிந்த நபர்களிடம் கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது. தெரியாத விஷயத்தை தெரிந்து பண்றதை விட, அதை தெரிந்தவர்களின் கையில் கொடுத்து பண்ணுவதே சிறப்பாக அமையும் என்பது என் கருத்து
கன்னடம், தெலுங்கு, மலையாளம் என தொடர்ச்சியாக படங்கள் தயாரிக்க இருக்கிறீர்களாமே?
'தெகிடி' படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. அங்கு வேலைகள் ஆரம்பிப்பதற்குள் ஏதோ படப்பிடிப்பு நிறுத்தம் என்றார்கள். எனக்கும் இங்கு வேலைகள் இருந்ததால் வந்துவிட்டேன். இந்த வருட இறுதிக்குள் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் திருக்குமரன் நிறுவனம் தனது கிளைகள் விரிவாக்க திட்டமிட்டு இருக்கிறது. ஏற்கனவே 'இறுதிச்சுற்று' படத்தின் மூலமாக இந்தியில் எங்களது நிறுவனம் காலூன்றி விட்டது.
உங்கள் நிறுவனத்தின் மதிப்பு என்பது உயர்ந்திருக்கிறது. பெரிய நடிகர்கள், இயக்குநர்கள் கொண்ட படங்களை தயாரிக்காததிற்கு காரணம் தயக்கமா, பயமா..
தயக்கும், பயம் இரண்டுமே இருக்கிறது. நான் எல்லாம் சினிமாத்துறைக்கு வந்து இப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். அவர்கள் எல்லாம் சினிமா ஜாம்பவான்கள். அவர்களோடு படம் பண்ணும் போது, ஏதும் கருத்து மோதல் வந்துவிடக் கூடாது என்ற தயக்கம் இருக்கிறது. அதே போல அவர்களை வைத்து படம் பண்ணி, பட்ஜெட் அதிகமாகி அதோட பிரச்சினைகள் எல்லாம் நம்மால் தாங்கி கொள்ள முடியுமா என்ற பயமும் இருக்கிறது. இப்போது வரைக்கும் நான் ஜாலியாக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும் இரவு போய் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வர வேண்டும் என்ற விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். நண்பர்களோடு, குடும்பத்தோடு இப்படி ஜாலியாக இருக்கும்போது, பெரிய படங்கள் தயாரித்துவிட்டு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. பெரிய பட்ஜெட் படங்கள் தயாரிக்கும் அளவுக்கு இன்னும் நான் வளரவில்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் போது இவ்வளவு பெரிய நிறுவனமாக உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டு தான் தொடங்குனீர்களா?
நாங்கள் தனித்தனியாக ஒவ்வொரு படமும் லாபமா, நஷ்டமா என்று பார்ப்பதில்லை. ஏப்ரல் 1 தேதி முதல் மார்ச் 31 தேதி முடியும் போது நிறுவனம் எவ்வளவு லாபம் அடைந்திருக்கிறது என்பதை தான் பார்க்கிறோம். 2014ல் எவ்வளவு சம்பாதித்தோம், எவ்வளவு வரி கட்டினோம். இந்த வருடம் எவ்வளவு சம்பாதிக்க போகிறோம் அவ்வளவு தான். லாபத்தைக் கூட்ட வேண்டும் என்பதை மனதில் வைத்து தான் படங்கள் தயாரிப்பு எண்ணிக்கை அதிகப்படுத்தி இருக்கிறோம்.
'அட்டகத்தி' தயாரிக்கும் போது அது உங்கள் வீட்டுக்கு தெரியாது என்றீர்கள். இப்போது உங்கள் வீட்டில் என்ன சொல்கிறார்கள்?
நாங்கள் பெரிய பணக்கார குடும்பம் எல்லாம் கிடையாது. மிடில் கிளாஸ் குடும்பத்துக்கு கொஞ்சம் மேல் அவ்வளவு தான். எதுவானாலும் பொறுமையாக பார், அவசரப்படாதே என்று சொல்லுவார்கள். எவ்வளவு முடியுதோ பாரு, இல்லையென்றால் நம்ம வியாபாரம் இருக்கிறது அதைப் பார் என்பார்கள். ஆசைக்கு படம் பண்ணு, மீதி நாள் இங்கு வந்து நேரம் செலவழி என்று தான் சொல்லுகிறார்கள். எனது குழந்தைகளுக்கு அப்பா படம் பண்ணுகிறார் என்று மட்டும் தெரியும். என்னுடைய நிழல் அவர்கள் மீது படிந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.
தயாரிப்பைத் தொடர்ந்து இயக்குநர் அவதாரம் எடுப்பதற்கு காரணம் என்ன?
தொடர்ச்சியாக தயாரிப்பை கவனித்து வரும் போது, ஒரு கட்டத்தில் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்து வருவது போல தெரிகிறது. புதிதாக வாழ்க்கையில் ஏதாவது பண்ண வேண்டும் என்று தான் இந்த துறைக்கே நான் வந்தேன். அதே போல தான் தயாரிப்பில் இருந்து என்னவென்று பார்த்தாகி விட்டது. இப்போது இயக்கம் என்னவென்று பார்ப்போம் என்று ஒரு முயற்சி தான். 3 கதைகள் எழுதி வைத்திருக்கிறேன். எதை இயக்கப் போகிறேன் என்று இன்னும் முடிவு செய்யவில்லை.