ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோடி பட்ஜெட் படத்தில் வில்லன் ஆவாரா விக்ரம்?

ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோடி பட்ஜெட் படத்தில் வில்லன் ஆவாரா விக்ரம்?
Updated on
1 min read

நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் அல்லாமல், படப்பிடிப்புக்கு மட்டுமே ரூ.190 கோடி பட்ஜெட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ள படத்தில் இயக்குநர் ஷங்கரும் ரஜினியும் இணைகிறார்கள்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக வில்லன் கதாபாத்திரத்துக்கு நடிகர் விக்ரம் அணுகப்பட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 'ஐ'. அதைத் தொடர்ந்து ஷங்கரின் அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

'லிங்கா' பட அனுபவத்தால் மீண்டும் ஓர் உடனடி ஹிட் கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் ரஜினி. இதனால் ஷங்கர் - ரஜினி கூட்டணி மீண்டும் சேர வாய்ப்பு அதிகம் என்றது கோலிவுட்.

இந்நிலையில் ஷங்கர் - ரஜினி இருவருமே இணைவது உறுதியாகிவிட்டது. அந்தப் படத்தை 'கத்தி' புகழ் லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

இது குறித்து விசாரித்தபோது கிடைத்த நம்பத்தக்க தகவல்கள்:

" 'ஐ' படத்தின் படப்பிடிப்பு தாமதமானபோது விஜய் - விக்ரம் இருவரையும் மனதில் வைத்து கதை ஒன்றை எழுதினார் ஷங்கர். 'லிங்கா' படத்தைத் தொடர்ந்து மீண்டும் இணையலாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டதன் பேரில் அக்கதையை ரஜினிக்காக மாற்றினார்.

தற்போது, ரஜினி நடிக்கவிருப்பதால் பட்ஜெட்டும் அதிகமாகி இருக்கிறது. நடிகர்கள் - தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் நீங்கலாக படப்பிடிப்புக்கு மட்டுமே ரூ.190 கோடி பட்ஜெட். இதற்கு, லைக்கா நிறுவனம் சம்மதம் தெரிவித்துவிட்டது.

விஜய்யை மனதில் வைத்து எழுதிய கதையில் நாயகனாக ரஜினி இடம்பெற்றுவிட்டதால், வில்லன் வேடம் யார் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது.

நாயகனுக்கு இணையான வில்லன் வேடம் என்பதால் பெரிய நடிகர்கள் யாராவது நடித்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஷங்கர். விஜய் - விக்ரம் இருவருக்கும் எழுதிய கதை என்பதால், தற்போது ரஜினிக்கு வில்லனாக விக்ரமை நடிக்க வைக்கலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறார்.

தற்போது விக்ரம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், சென்னை திரும்பிய உடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்" என்றார்கள்.

ரூ.190 கோடி படத்தின் பட்ஜெட், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குநர் ஷங்கர் ஆகியோரின் சம்பளம் எல்லாம் சேர்த்தால் மொத்த படத்தின் பட்ஜெட் என்று கணக்கு போட்டால்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in