த்ரிஷா - வருண்மணியன் கருத்து வேறுபாடு: ரத்தாகிறதா திருமணம்?

த்ரிஷா - வருண்மணியன் கருத்து வேறுபாடு: ரத்தாகிறதா திருமணம்?
Updated on
1 min read

நடிகை த்ரிஷா மற்றும் தயாரிப்பாளர் வருண்மணியன் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் த்ரிஷா. இவரும் தெலுங்கில் முன்னணி நாயகனான ராணாவும் காதலித்து வந்தார்கள். இருவருமே ஒன்றாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து த்ரிஷாவும், தொழிலதிபர் வருண் மணியனுக்கும் காதல் மலர்ந்தது. இருவரது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தார்கள். ஜனவரி 23ம் தேதி இருவருக்கும் பிரம்மாண்டமாக வருண்மணியன் இல்லத்தில் வைத்து திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தனது திரையுலக நண்பர்களுக்கு விருந்தளித்தார் த்ரிஷா.

இந்நிலையில், சில நாட்களாக த்ரிஷா - வருண்மணியன் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து த்ரிஷாவுக்கு நெருக்கமான நண்பர்களிடம் விசாரித்த போது, "த்ரிஷா, வருண்மணியன் இருவருக்குமே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பது உண்மை தான். வருண்மணியன் தங்கையின் திருமணத்துக்கு கூட த்ரிஷா செல்லவில்லை. வருண்மணியன் தனக்கு அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்தை கூட த்ரிஷா கழட்டி விட்டார். தொடர்ச்சியாக படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். சிம்பு - செல்வராகவன் இணையும் படம், கமலுக்கு ஜோடியாக ஒரு படம் என தொடர்ச்சியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்" என்றார்கள்.

அதுமட்டுமன்றி, த்ரிஷா - வருண்மணியன் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள். கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கும் நிலையில், அடுத்தாண்டு திருமணம் நடைபெறுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in