இது நம்ம ஆளு இசை சர்ச்சை: குறளரசன் காட்டம்

இது நம்ம ஆளு இசை சர்ச்சை: குறளரசன் காட்டம்
Updated on
1 min read

'இது நம்ம ஆளு' படத்தின் இசைக்கு அனிருத் தான் உதவி செய்து வருகிறார் என்ற சர்ச்சைக்கு அப்படத்தின் இசையமைப்பாளர் குறளரசன் காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

சிம்பு, நயன்தாரா, சூரி நடிக்க இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வரும் படம் 'இது நம்ம ஆளு'. முதல் பிரதி அடிப்படையில் பாண்டிராஜ் தயாரித்து வரும் இப்படத்துக்கு குறளரசன் இசையமைத்து வருகிறார். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள். ஆனால், 2 பாடல்களின் படப்பிடிப்பு இன்னும் முடிவு பெறவில்லை.

இந்நிலையில், 'இது நம்ம ஆளு' இசையில் குறளரசனுக்கு அனிருத் மற்றும் சிம்பு இருவரும் உதவி புரிந்து வருகிறார்கள் என்று செய்திகள் வெளியானது. அதற்கு குறளரசன் மிகவும் காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.

"வார இதழ் ஒன்றில் தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்புகிறார்கள். பொய்யான செய்திகளை பரப்பியதாக அந்த இதழ் மீது வழக்கு தொடரவுள்ளேன். அடுத்த மாதம் 'இது நம்ம ஆளு' பாடல்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறேன். இப்படியான மலிவான விளம்பரத்தால் யாரும் பாடல்களின் வெற்றியைத் தடுக்க முடியாது.

இந்த புரளிகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் கர்மா அவர்களை பார்த்துக் கொள்ளும். இதற்கெல்லாம் எனது சக்தியை நான் வீணாக்க விரும்பவில்லை ஏனென்றால் நீங்கள் நினைப்பதை விட நான் மன முதிர்ச்சியடைந்தவன்.

நான் கடவுளை நம்புகிறேன். பாடல்கள் பெரிய ஹிட் ஆகவேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்கிறேன்." என்று தெரிவித்திருக்கிறார் குறளரசன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in