Last Updated : 16 Apr, 2015 12:28 PM

 

Published : 16 Apr 2015 12:28 PM
Last Updated : 16 Apr 2015 12:28 PM

தனுஷ் கற்ற பாடம்.. வெற்றிமாறன் ஆசை- காக்கா முட்டை பட விழா துளிகள்

'காக்கா முட்டை' சிறுவர்கள் போல எதார்த்தமாக நடித்துவிட்டேன் என்றால் நான் ஒரு நல்ல நடிகன் என்று சொல்லிக் கொள்வேன் என தனுஷ் தெரிவித்தார்.

மணிகண்டன் இயக்கத்தில் ரமேஷ், விக்னேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காக்கா முட்டை'. தனுஷ், வெற்றிமாறன் இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

'காக்கா முட்டை' ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை அண்ணா நகரில் உள்ள ரிலையன்ஸ் டிஜிட்டலில் நடைபெற்றது. மொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டு படத்தை ட்ரெய்லரை வெளியிட்டார்கள். இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பேசியது:

தனுஷ் : 'காக்கா முட்டை' வெளியீட்டிற்கு முன்பே எங்களுக்கு பெருமையைச் சேர்த்துக் கொண்டிருக்கும் படம். இந்தப் படத்தை தயாரித்ததில் எங்களுக்கு மிகவும் பெருமை. இப்படத்தின் கதையை முதல் 10 பக்கம் மட்டுமே படித்தேன், அதற்கு பிறகு படிக்கவில்லை. ஏனென்றால் அக்கதையில் உள்ள சின்ன காக்கா முட்டை நான், பெரிய காக்கா முட்டை எனது அண்ணன் செல்வராகவன். எங்களுடைய வாழ்க்கையை நான் பேப்பரில் பார்த்த மாதிரி இருந்தது. இப்படத்தில் வரும் பாதி விஷயங்களை நாங்கள் பண்ணியிருக்கிறோம். கதையைப் படிக்கும் போது மிகவும் நெகிழ்ந்துவிட்டேன். கண்டிப்பாக இந்தப் படத்தில் எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

'காக்கா முட்டை' சிறுவர்கள் எங்களுக்கு மிகவும் பெருமை சேர்த்திருக்கிறார்கள். என்றைக்காவது ஒரு நாள், நான் இவர்களைப் போல எதார்த்தமாக நடித்துவிட்டேன் என்றால் பெருமைப்பட்டுக் கொள்வேன். நான் ஒரு நல்ல நடிகன் என்று சொல்லிக் கொள்வேன். கேமராவே இல்லாத மாதிரி நடித்திருக்கிறார்கள்.

'காக்கா முட்டை' மற்றும் 'விசாரணை' ஆகிய இரண்டு படங்களுமே ஹிட் படங்கள் என்று தயாரிப்பாளராக என்னால் கூற முடியும். இரண்டு படங்களிலுமே எனக்கு லாபகரமாக இருக்கிறது. தொலைக்காட்சி உரிமை மூலமாகவே நான் போட்ட பணத்தை எனக்கு எடுத்துக் கொடுத்திருக்கிறது. இந்த இரண்டு படங்களுமே வெளியாகி, ஒரு ரூபாய் வசூலித்தால் கூட எனக்கு சூப்பர் ஹிட் தான்.

இயக்குநர் மணிகண்டன்: இப்படத்தின் சிறுவர்கள் தேசிய விருது மட்டும் வாங்கவில்லை. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிறந்த நடிகர்கள் விருது வாங்கியிருக்கிறார்கள். இந்த விருதுகளோடு பெருமை என்ன என்பது இவர்களுக்கு தெரியாது. ஏதோ விருது வாங்கியிருக்கிறோம் என்பது மட்டுமே தெரியும். "டேய்.. உனக்கு தேசிய விருது வந்திருக்குடா" என்று ரமேஷிடம் கூறும் போது "அண்ணா. போண்ணா" என்று கூறினான். "டேய். தேசிய விருதுடா. விமானத்தில் போலாம் டா" என்று கூறியவுடன், "விமானத்திலா எப்போது அண்ணா போலாம்." என்றான். இப்பவுமே விமானத்தில் போகப்போகிறோம் என்று நினைத்து தான் சந்தோஷமாக இருக்கிறான். விருதின் பெருமைகள் என்ன என்பது அவனுக்கு தெரியவில்லை. படமும், பசங்களும் கண்டிப்பாக உங்களை கவர்வார்கள்

விக்னேஷ்: இந்தப் படத்துல நடிச்சது சந்தோஷமா தான் இருக்கு. சான்ஸ் வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. வந்தது சந்தோஷமா தான் இருக்கு. போதும். இன்னும் நிறைய படங்கள் வரணும்னு ஆசைப்படுறேன்.

ரமேஷ்: படத்துல நடிச்சது ஜாலியா தான் இருந்துச்சு. நடிக்கும் போது இயக்குநர் திட்டலாம் இல்லையா. தனுஷை நேரில் பார்க்கும் போது அட, நானாடா தனுஷைப் பார்க்கிறேன் என்பது போல இருந்துச்சு. "சூப்பரா நடிக்கிற. என்னடா விமானத்துல வேற போகப் போற" என்று தனுஷ் தெரிவித்தார்.

ஐஸ்வர்யா: படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போதே எல்லாருக்கும் தெரிந்திருக்கும் இப்படத்தில் குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் போது இந்த வேடம் பண்ணாதீர்கள் என்று கூறினார்கள். ஏன் பண்ணக் கூடாது. பண்ணினால் என்ன தான் நடக்கும் என்பது தான் என்னுடைய கேள்வியாகவே இருந்தது. அம்மா ரோல் நடித்துவிட்டால் அண்ணி, அக்கா வேடங்கள் தான் பண்ண வேண்டும் என்று தெரிவித்தார்கள். இப்பாத்திரம் மூலம் என் நடிப்பு திறமையை நிரூபிக்க முடியும் என்று நம்பி இப்படத்தை ஒப்புக் கொண்டேன். எத்தனை படங்களில் நாயகியாக நடித்தாலும், இப்படத்தில் நடித்தது என்னால் மறக்கவே முடியாது.

இயக்குநர் வெற்றிமாறன்: சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற படங்கள் பண்ண வேண்டும் என்று எப்போதுமே நினைப்பேன். திரைப்பட விழாக்களில் வெளியாகும் படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறுவதில்லை என்று பொதுவாக ஒரு எண்ணம் இருக்கிறது. திரைப்பட விழாக்களிலும் சரி, வசூல் ரீதியிலும் சரி அனைத்து விதத்திலும் வரவேற்பைப் பெறக்கூடிய படங்கள் பண்ண வேண்டும் என்பது என் ஆசை.

'காக்கா முட்டை' கதை அதற்கான தகுதியான கதையாக எனக்கு தெரிந்தது. இக்கதையை கேட்கும் போது, கதையில் என்னைப் பார்த்தேன். தனுஷ் அப்படித்தான் கூறினார். இப்படி அனைவரையும் ஈர்க்கும் கதை என்பதால் சர்வதேச அளவில் வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இந்த படத்தை திரைப்பட விழாக்கள் அனைத்துக்கும் அனுப்பி வைத்தோம். இந்த மாதிரி நேரம் கொடுத்து, அனைத்து திரைப்பட விழாக்களுக்கும் அனுப்பி வைப்பதை பணம் முதலீடு செய்தவர்கள் நினைக்க மாட்டார்கள். அந்த விதத்தில் தனுஷ் இந்தப் படத்துக்கு உதவி இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x