

'சதுரங்க வேட்டை' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நட்ராஜ் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான படம் 'சதுரங்க வேட்டை'. மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
'சதுரங்க வேட்டை' படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்குநர்கள், முன்னணி நடிகர்கள் இப்படத்திற்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.
இயக்குநர் வினோத் இயக்கவிருக்கும் அடுத்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் யார் நடிக்கவிருக்கிறார்கள், அது 'சதுரங்க வேட்டை' இரண்டாம் பாகமா எனப் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
இயக்குநர் வினோத்தை சூர்யாவிடம் அழைத்துச் சென்று கதை சொல்ல வைத்திருக்கிறார் லிங்குசாமி. 'சதுரங்க வேட்டை 2' கதையைக் கேட்ட சூர்யா, அப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
'மாஸ்' படத்தைத் தொடர்ந்து '24', இயக்குநர் ஹரி இயக்கும் படம், இயக்குநர் ரஞ்சித் இயக்கும் படம், தற்போது இயக்குநர் வினோத் இயக்கும் படம் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.