புலிக்காக கார்த்தி, நாகார்ஜூனா பட வாய்ப்பை கைவிட்ட ஸ்ருதி ஹாசன்: விஜய் படக்குழு நெகிழ்ச்சி

புலிக்காக கார்த்தி, நாகார்ஜூனா பட வாய்ப்பை கைவிட்ட ஸ்ருதி ஹாசன்: விஜய் படக்குழு நெகிழ்ச்சி
Updated on
1 min read

கார்த்தி - நாகார்ஜூனா படத்தில் இருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதால், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ருதிஹாசன் மீது வழக்கு தொடுத்தது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து விலகியதற்கு காரணம் வேறொரு முன்னணி நடிகரின் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க சென்றுவிட்டார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில், 'புலி' படத்துக்கு ஸ்ருதி ஹாசன் தேதிகள் ஒதுக்கியிருப்பதாக 'புலி' திரைப்படத் தயாரிப்பாளர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் கூறியிருப்பது, " 'புலி' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தலக்கோணம் சுற்றுலா தளத்தில் நடைபெற்று வருகிறது. கலை இயக்குநர் முத்துராஜ் தலைமையில் 150 பேருக்கு மேலானோர் இரண்டு மாதம் பணிபுரிந்து காடும் - ஏரியும் சங்கமிக்கும் இடத்தில் இந்திய திரையுலகில் யாரும் பார்த்திராத வகையில் கிராமம் ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

ஏப்ரல் மாதத்தில் இந்தப் படப்பிடிப்பில் ஸ்ருதி கலந்து கொள்ளவில்லை என்றால், மே மாதம் சுற்றுலா பயணிகள் வந்துவிடுவதால் மொத்த செட்டையும் பிரிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் எங்களுக்கு பெரும் இழப்பும் நஷ்டமும் ஏற்படும். இதை நாங்கள் ஸ்ருதி ஹாசனிடம் தெரிவித்தோம்.

அதைப் புரிந்துகொண்டு இறுதிக்கட்டத்தில் ஒரு படம் நின்றுவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் 'புலி' படப்பிடிப்பில் ஸ்ருதி ஹாசன் கலந்துகொண்டார். ஸ்ருதி கண்டிப்பாக வேறு புதிய படத்தில் நடிக்க செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.

மேலும், தயாரிப்பாளர்களாகிய எங்களது கஷ்டங்களை மனதில் கொண்டு பல தேதிகளை எங்களுக்காக விட்டு வந்த ஸ்ருதி ஹாசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in