

ஜோதிகா மீண்டும் நடிப்புலகிற்கு திரும்பியிருக்கும் '36 வயதினிலே' திரைப்படத்தை மே 8ம் தேதி வெளிடத் தீர்மானித்திருக்கிறார்கள்.
மலையளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'ஹவ் ஓல்ட் ஆர் யூ'. நடுத்தர வயது பெண் ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைப் பற்றிய இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஜோதிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் தயாரிக்கிறார்.
நீண்ட நாட்கள் நடிப்புக்கு ஓய்வு தந்திருந்த நடிகை ஜோதிகாவின் ரீ-என்ட்ரி படமாக இது பார்க்கப்படுகிறது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. எந்த ஒரு காட்சியையும் நீக்கச் சொல்லாமல் படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.
தற்போது '36 வயதினிலே’ படத்தை மே 8ம் தேதி வெளியிட படக்குழு தீர்மானித்திருக்கிறது. விரைவில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்க திட்டமிட்டு இருக்கிறது.