தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சிம்ரன்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய சிம்ரன்
Updated on
1 min read

சிம்ரன் படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். ‘சிம்ரன் அன்ட் சன்ஸ்’ என அந்நிறுவனத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார். அதோடு படத்தை இயக்கவும் போகிறார்.

கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்ட சீனியர் நடிகர்களுடனும் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட ஜுனியர் நடிகர்களுடனும் 90களின் இறுதியிலும் 2000லும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர் சிம்ரன்.

அதன் பின் தீபக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகத்தை விட்டு விலகியிருந்தார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மவான சிம்ரன், சிறிய இடைவெளிக்குப் பிறகு 'சேவல்', 'வாரணம் ஆயிரம்', 'ஐந்தாம்படை', 'டிஎன் 07 ஏஎல் 4777', ஆகிய படங்களில் நடித்தார்.

அதன் பின் மீண்டும் சிறிது இடைவெளி விட்டு கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்தார். தற்போது ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கும் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்குப் பின்னரும் சென்னையிலேயே வசித்து வரும் சிம்ரன், நீண்ட நாட்களாகவே திரைப்படத்தைத் தயாரிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு வந்தார். தற்போது படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்திருக்கிறார். ‘சிம்ரன் அன்ட் சன்ஸ்’ என அவருடைய நிறுவனத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார். அதோடு படத்தை இயக்கவும் போகிறார்.

இது குறித்து சிம்ரன் கூறியதாவது:

“நான் நடிகையாக இருந்த அனுபவமும் எனது சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரித்த அனுபவமும் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறுதுணையாய் இருந்தது. எனது இந்த முயற்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.

எனது ரசிகர்கள் எனக்களித்த ஆதரவிற்கும் நன்மதிப்பிற்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சினிமாவின் மீது எனக்கிருக்கும் ஆர்வமே என்னை படங்கள் தயாரிக்கவும் மற்றும் இயக்கவும் உந்துதலாய் உள்ளது. சினிமாவின் தரத்தை அடுத்த இடத்திற்கு முன்னேற்ற புதுப் புது திறமைககளை அறிமுகப்படுத்த வேண்டியிருப்பதை உணர்கிறேன்.

இந்த வருடம் இரண்டு படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதைக் களத்தை உடையதாய் அந்தப் படங்கள் இருக்கும். எனது முயற்சிகளை எப்போதுமே ரசிகர்கள் ஆதரித்தது உண்டு. தயாரிப்பாளர் , இயக்குநர் என்ற எனது இந்த முயற்சியையும் அனைவரும் ஆதரிக்க வேண்டும்,” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in