

தான் கூறிய 'ஓ காதல் கண்மணி' கருத்துகள் மம்மூட்டியின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ராம் கோபால் வர்மா தெரிவித்திருக்கிறார்.
'ஓ காதல் கண்மணி' படத்தைப் பார்த்துவிட்டு ராம் கோபால் வர்மா, "விருது வழங்குபவர்களுக்கு சிறிதளவேனும் நியாய உணர்வு இருந்தால், மம்முட்டிக்கு வழங்கிய விருதுகளை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு, அவற்றை அவரது மகன் துல்கர் சல்மானுக்கு வழங்கிவிடுவார்கள்.
அவரது மகனோடு ஒப்பிடும்போது மம்முட்டி வெறும் ஜூனியர் ஆர்டிஸ்டே. தனது மகனிடமிருந்து மம்முட்டி நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டும்." உள்ளிட்ட பல சர்ச்சையான கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
இக்கருத்துகளுக்கு "இன்னும் 10 பிறவி எடுத்தாலும், நான் எவ்வளவும் சாதித்தாலும், என் தந்தையின் நடிப்புத் திறமையில் மில்லியனில் ஒரு சதவீதம்கூட என்னால் ஈடுகொடுக்க முடியாது" என்று ராம் கோபால் வர்மாவை குறிப்பிடாமல் பதிலளித்தார் துல்கர் சல்மான்.
இந்நிலையில் துல்கர் தன்னைப் பற்றி தான் கூறியிருக்கிறார் என்று புரிந்துக் கொண்ட ராம் கோபால் வர்மா, துல்கரின் ட்விட்டர் தளத்தினைக் குறிப்பிட்டு "நான் என் மனதில் பட்டதை அப்படியே பேசியும், மகிழ்ச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் வெளிப்படுத்தியும் பழக்கப்பட்டவன்.
நான் அப்படிப் பேசுவது இது முதல்முறையல்ல. உயர்ந்த தந்தை ஒருவரின் மிக சிறப்பான மகன் என்ற பொருள்படுமாறே நான் பேசியிருந்தேன் ஆனால் சில முட்டாள்களால் அந்த வகையான வாழ்த்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தந்தையிடமும் இதை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அவரை எனது ட்வீட்டுகள் புண்படுத்தியிருக்குமேயானால் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.